]பள்ளிகளில் மீண்டும் பி.டி. பீரியட்!

public

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் உடற்கல்வி வகுப்புகளை அமல்படுத்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றுக்குப் பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டம் மற்றும் உடற்கல்வி வகுப்புகளை நடத்திட அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்றின் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களுக்கான பி.டி. பீரியட் எனப்படும் உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி, விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு இருப்பதால், அவர்களை தவிர 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி, விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் உடற்பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை. 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது. பேருந்து படிக்கட்டில் தொங்கியபடியே பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *