சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சல்மான் கான் இப்படத்தின் டீசரை வெளியிட்டார்.
விஷால் நடிப்பில் உருவான ‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ஹீரோ. இப்படத்தின் டீசர் இன்று(அக்டோபர் 24) காலை வெளியாகியுள்ளது. சல்மான் கான் இப்படத்தின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இரும்புத்திரை படத்தில் தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் உலகில் நடக்கும் முறைகேடுகளை பேசிய பி.எஸ்.மித்ரன் இம்முறை கல்வி அமைப்பை கையில் எடுத்திருக்கிறார். ‘மைண்ட் யுவர் பிசினஸ்’ இதத்தான் நம்ம கல்வி அமைப்பு சொல்லித்தருது, நம்ம எல்லோராலயும் படிக்க முடியும், ஆனா எல்லோராலயும் சாதிக்க முடியாது’ என டீசரில் இடம்பெறும் வசனங்கள் படத்தின் கதை களத்தை கூறுவது போல அமைந்துள்ளது.
கல்வி அமைப்பில் நடக்கும் முறைகேடுகள், கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்கள், அதனை எதிர்க்கும் சூப்பர் ஹீரோவாக சிவ கார்த்திகேயன் என அரசியலும் ஜனரஞ்சகமும் கலந்த டீசராக வெளியாகியிருக்கிறது ’ஹீரோ’. இதற்கு முன் இக்கருத்தை பல படங்கள் பேசியிருந்தாலும், ஹீரோ இதில் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தான் படத்தின் வெற்றியை நிர்ணயிப்பதாக அமையும்.
டீசரில் இடம்பெறும் சில காட்சிகள் இரும்புத்திரை படத்தையும், சிவகார்த்தியின் வேலைக்காரன் படத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது உறுத்தல்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. அர்ஜுன் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அபய் தியோல் வில்லனாக நடித்துள்ளார். நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் அறிமுகமாகவுள்ளார். இசை: யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.
இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதி ஹீரோ வெளியாகவிருக்கிறது.
�,”