உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழகத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும் ‘செட் தேர்வு’ மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட் தேர்வு’ ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது.
பல்கலைக் கழக மானிய குழுவின் வழிகாட்டுதலின்படி (யூஜிசி) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘செட்’ மற்றும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்களும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பிஎச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
தற்போது இந்த அரசாணையை திரும்ப பெற வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, அதன் பின்னர் ‘செட்’, ‘நெட்’ தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு பெற போராடி வரும் நிலையில், இனி பி.எச்.டி., ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணபிக்க முடியும் என்று தகுதி நிர்ணயித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது.
ஏழை கிராமப்புற மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடி மாணவர்கள் முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முயற்கொம்புதான். அதற்கு பொருளாதார சூழலும் இடம் தராது. எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடித்து, வேலைவாய்ப்புத் தேடி நகர வேண்டிய சூழலில் இருக்கும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத் தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை.
பிஎச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி இன மாணவர்கள் உயர்கல்வித் துறைக்கு பணி வாய்ப்புப் பெற்று வந்துவிடக்கூடாது என்ற வன்மம் நிறைந்த குறிக்கோள்களை தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது பாஜக அரசு. அதன் அடிப்படையில்தான் யூ.ஜி.சி. சமூக நீதிக்கு எதிரான இத்தகைய விதிமுறைகளை வகுத்திருக்கின்றது. அதையே காரணம் காட்டி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்து உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளித்திருப்பதைப் பெரும் சாதனையாக பறைசாற்றி பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்?
சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**- பிரியா**�,”