பைசர் நிறுவனத்தின் மாத்திரை, கொரோனா தொற்றுக்கு எதிராக 89 சதவிகிதம் திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள், இணைந்து கொரோனா சிகிச்சைக்காக மால்னுபிராவிர் எனும் மாத்திரையை தயாரித்துள்ளன. இது நோயின் தீவிரத்தையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் குறைக்கிறது என்றும் ஐந்து நாட்களுக்கு இரண்டு வேளை இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாத்திரைக்கு உலகின் முதல் நாடாக, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து பல நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.
இந்நிலையில்,கொரோனா தொற்றுக்கு எதிராக தாங்கள் தயாரித்துள்ள மாத்திரை 89 சதவிகிதம் திறன் கொண்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, 775 பேரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாத்திரை எடுத்துக் கொண்டவர்களில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாத்திரை தொடர்பான இடைக்கால அறிக்கையை அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், பேக்ஸ்லோவிட் என்று பெயரிடப்பட்ட மாத்திரையை தினமும் இரண்டு வேளை என்ற முறையில் மூன்று மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான தனது நிறுவனத்தின் மாத்திரையை பயன்பாட்டுக்கு கொண்டுவர 90 நாடுகளுடன் பைசர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கொரானா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த அமெரிக்க நிறுவனமான பைசர் தான் பாக்ஸ்லோவிட் எனும் மாத்திரையை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,