புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வாகன ஓட்டிகளும் வரி குறைப்பு குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நாடு முழுவதும் கடந்த இரு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. வாட் மற்றும் சரக்குக் கட்டணங்கள் போன்ற உள்ளூர் வரியைப் பொறுத்து எரிபொருள் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்து சென்றும், டிராக்டர்களில் பேரணியாகச் சென்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்துள்ளார். 2சதவிகிதம் வாட் வரியைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அங்கு பெட்ரோல் டீசல் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு சுமார் 71 கோடி ரூபாய் வரை மக்களுக்குப் பயன் கிடைக்கும் என்று ஆளுநர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பெட்ரோல்- டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் குறைக்கவேண்டும். மாநில அரசுக்கு வரி வருவாய் குறைவாகத்தான் உள்ளது. ஆனால் அதற்காக மக்கள் மீது திரும்பத் திரும்ப வரி போட முடியாது. மாநில அரசுக்கு வரி வருவாயைக் கூட்ட ஆதாரம் கிடையாது. ஆனால் மத்திய அரசுக்கு வரி வருமானத்தை உயர்த்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. எனவே மத்திய அரசு நினைத்தால் வரி விதிப்பைக் குறைக்க வாய்ப்புகள் உண்டு” என கூறியுள்ளார்.
**-பிரியா**
�,