சேவல் சண்டைக்கு அனுமதி : தென்காசி டிஎஸ்பிக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

தை பொங்கலை முன்னிட்டு சேவல் சண்டை நடத்த கோரிய வழக்கில், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மனுவை பரிசீலனை செய்து ஜனவரி 11ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தை பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது போன்று சில இடங்களில் சேவல் சண்டையும் நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி தமிழரின் கலைகளில் ஒன்றான வெற்றுக்கால் சேவல் சண்டை, வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடமும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சேவல் சண்டை நடைபெற்றது. அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன் ஏற்பாடுகளுடன் சேவல் சண்டை நடைபெறும்.

தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி அலுவலரிடம் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அதனால், மனுவைப் பரிசீலித்து சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உரியப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று(ஜனவரி 3) நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சேவலின் உயிருக்கு எவ்வித ஆபத்து ஏற்படுத்தும் வகையில் போட்டி நடைபெறாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் சேவல் போட்டி நடத்த அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதி தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் மனுதாரரின் மனுவைப் பரிசீலனை செய்து ஜனவரி 11ஆம் தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share