பெருங்குடி குப்பை கிடங்கு: இரண்டு நாட்களாக எரியும் தீ!

Published On:

| By admin

பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இந்த குப்பை கிடங்கு பள்ளிக்கரணை- துரைப்பாக்கம் 200 அடி சாலையில் தொடங்கி பெருங்குடி வரை சுமார் 1000 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய குப்பை கிடங்கு ஆகும்.

மடிப்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தரமணி பகுதியின் மழைநீர் வடிகால் பகுதியாகவும் விளங்கிய இந்த சதுப்பு நிலப்பகுதியின் முகமே மாறிவிட்டது. எப்போதும் நீர் நிரம்பி ததும்பும், பறவைகள், குருவிகள் ஏராளமாக சுற்றும். குளிர்ந்த சுத்தமான காற்றும் வீசும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சில கிலோமீட்டர் தூரத்துக்கு காற்றில் துர்நாற்றமே வீசுகிறது. ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகிவிட்டன.

இந்த சூழ்நிலையில் இந்த குப்பை கிடங்கு மிகப்பெரிய பிரச்சினையாகி உள்ளது. மாற்று வழிகளை கண்டுபிடித்து சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று கோர்ட்டு பலமுறை அறிவுறுத்தியும் இருக்கிறது. இந்த குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைப்பதும் எளிதானது அல்ல. தீயணைப்பு வாகனங்கள் ஒரே வழியில் தான் செல்ல முடிகிறது. அங்கிருந்து குப்பைகள் மீது சென்று தீயை அணைக்க முடியவில்லை. லட்சக்கணக்கான டன் குப்பைகள் கிடப்பதால் நெருப்புடன் கரும்புகை பெருமளவு வெளியேறுகிறது. அந்த புகை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சூழ்ந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் புகையில் சிக்கி உள்ளார்கள்.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது, உரம் தயாரிப்பது என்று பல திட்டங்கள் பற்றி பல முறை பேசியும் இதுவரை எந்த பலனும் இல்லை என்று அந்த பகுதியில் வசிப்பவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share