பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு ஜனவரி 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என மத்திய அரசு வாதிட்டது. ஜனவரி 21ஆம் தேதி விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது, தமிழக ஆளுநர் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவ்வழக்கு நேற்று (ஜனவரி 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அவகாசம் வழங்கினர். வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆளுநர் இந்தப் பரிந்துரை மீது முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில், பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
**ராஜ்**�,”