பெரம்பலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டு முத்துக்குமார் மற்றும் இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் நடந்தது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெரம்பலூர், துறைமங்கலம் நியூ காலனி, பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார்(40). ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரும் ஊர் காவல் படையில் பணியாற்றி வரும் சுஜித் என்பவரும் கடந்த மார்ச் 8ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
துறைமங்கலம் பகுதியில், யாரும் இல்லாத இடத்தில் சிறுமி ஒருவரிடம் 25 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டிருந்ததாகவும். அப்போது அவர்களிடம் யார் நீங்கள்? இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று ஏட்டு முத்துகுமார் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அந்த இளைஞர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். அதோடு தனது நண்பர்களைச் சம்பவம் நடந்த இடத்துக்கு வரவழைத்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. வீடியோவில், அந்த இளைஞர்களில் ஒருவர் எதற்காக விசாரிக்கிறீர்கள், உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. யார் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்கிறார். இதற்கு ஏட்டு முத்துக்குமார், நான் பணியில் இருக்கிறேன் என்று கூறுகிறார். இதனையடுத்து அந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்.
உடனே ஏட்டு, குடிபோதையில் வந்து தகராறு செய்துகொண்டிருக்கிறாய். வண்டியில் ஏறு. காவல்நிலையத்துக்குச் சென்று மெடிக்கல் மெமோ போட வேண்டும் கூறுகிறார். இதற்கு, நான் ஒரு வழக்கறிஞர் என்று சொல்கிறேன். இருந்தும் வண்டியில் ஏற சொல்கிறீர்கள் என்று பேசுவது பதிவாகியிருக்கிறது.
இந்நிலையில் தன்னை திட்டிய இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஏட்டு முத்துக்குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிஜிபி, ஐஜி, டிஐஜி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அந்த ஆடியோவில், பெரம்பலூர் மாவட்ட கான்ஸ்டபிள் முத்துக்குமார் பேசுகிறேன். பெரம்பலூர் ஆயுதப்படையில் பணியாற்றுகிறேன். கடந்த 8ஆம் தேதி எனக்கு இரவு ரோந்து பணி கொடுத்திருந்தார்கள். இந்த பணியின் போது, தனிமையில் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஒரு இளைஞர் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு வயது 25 இருக்கும். அந்த இளைஞரிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது துறைமங்கலம் 3 ரோடு பகுதியிலிருந்து, குடிபோதையில் இருந்த இளைஞர்களை வரவழைத்துத் தகாத முறையில் நடந்து கொண்டனர். பின்னர் தான் தகாத வார்த்தையில் பேசியது ஒரு வழக்கறிஞர் என்று தெரியவந்தது.
அவர் மீது பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் குடிபோதையில் தான் இருக்கிறார் என்று நன்றாகவே தெரியும். இன்ஸ்பெக்டர், அன்றைய செக்டார் ஆபீஸர் அண்ணாதுரை ஆகிய இருவரும் காவல் நிலையத்திலிருந்தனர். இவர்கள் இருவரும் நான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு வழக்கறிஞரின் அசிஸ்டண்ட் என்று சொல்லி அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தகாத வார்த்தையால் பேசிய வழக்கறிஞர் பெயர் தினேஷ் குமார். ஒருவேளை சம்பவத்தன்று அவரை நான் அடித்திருந்தால், ஏன் அடித்தீர்கள். ஒரு புகார் கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்கலாமே என்று சொல்லியிருப்பார்கள். சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சில குடிகாரர்களால் காவல்துறையினருக்குச் சிரமமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்தச்சம்பவம் குறித்து தினேஷ் குமாரிடம் நாம் விசாரித்ததில், ”தம்பி ஒருவரைப் பிடித்துச் சம்பந்தப்பட்ட ஏட்டு விசாரித்ததும் உடனே எனக்கு அவர் போன் செய்தார். இதையடுத்து அங்குச் சென்று ஏட்டுவிடம், இங்கு வைத்து ஏன் விசாரிக்கிறீர்கள். தப்பு செய்திருந்தால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வழக்குப்பதிவு கூடச் செய்யுங்கள் என்றேன். உடனே அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். வழக்கறிஞர் என்று கூறியும் இவ்வாறு பேசினார். தற்போது அவருக்குச் சாதகமாகப் பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். முதலில் என்ன நடந்தது என்பது குறித்து வீடியோ எடுக்கவில்லை” என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் ’அது வாக்குவாதம் தானே தவிர மிரட்டல் இல்லை’ என்று தெரியவந்ததை அடுத்து இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
**கவிபிரியா**�,”