கன்னியாகுமரியில் இருந்து மும்பை வரை இயக்கப்பட்டு வந்த ஜெயந்தி ஜனதா ரயில், இனி புனே வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். ஏனெனில் இங்கே இருந்து பெரும்பாலான மக்கள் மும்பையில் குடிபெயர்ந்துள்ளனர். அங்கே தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜெயந்தி ஜனதா ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ரயிலை இயக்கக் கோரி மக்கள் வைத்த தொடர் கோரிக்கையின் விளைவாக, ரயிலை மீண்டும் ஏப்ரல் மாதம் முதல் இயக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் புனே வரை மட்டுமே இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தென் மாவட்ட பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பயணிகள், ரயில் புனேவில் நிறுத்தப்பட்டால், பயணிகள் அங்கிருந்து வேறு ஒரு ரயிலை பிடித்து மும்பை செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதனால் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் முன்பு மாதிரி ரயிலை மும்பைவரை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மும்பை ரயில் பயணிகள் சங்க பொதுசெயலாளர் அப்பாத்துரை கூறுகையில், ‘‘தென்மாவட்ட மக்கள் மும்பைக்கு செல்ல இயக்கப்படும் ரயில்கள் மிக குறைவு. மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் 47 ஆண்டுகளாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரயிலை புனே வரை மட்டுமே இயக்குவது, பயணிகளை பாதிக்கும்.
ஏற்கனவே ஹபா உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் மும்பைக்கு புறநகர் பகுதிகள் வழியாக செல்வதால், பயணிகள் மாற்று ரயில்களை பிடித்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கின்றனர். அதனால், ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலை பயனடையும் வகையில் முன்புபோல் இயக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**