குற்றாலத்தில் குளிக்க அனுமதியா?: மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

Published On:

| By Balaji

குற்றால அருவிகளில் நாளைமுதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என தென்காசி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று சில சுற்றுலா பகுதிகளிலும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

குறிப்பாக, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள்தான் குற்றால சீசன். அந்த நேரத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் குளிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்வார்கள்.

அதனால் குற்றால அருவியில் குளிக்க எப்போது அனுமதி அளிக்கப்படும் என மக்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த தகவலில் உண்மையில்லை என்று தென்காசி மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அதனால் குற்றாலத்தில் குளிப்பதற்கான தடை தொடருகிறது. குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும்போது முறையான அறிவிப்பு வெளியிடப்படும். அதனால் யாரும் குற்றாலம் வர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share