தமிழகத்தில் 35 – 40டிகிரி செல்சியஸ் வரை கோடை வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் கொரோனாவும் அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சை, கும்பகோணம் என பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகளவில் ஏற்படுகிறது.
தேர்தல் நேரம் என்பதால், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறு தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறியும், கொரோனா கட்டுபாடுகள் இன்றியும் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசியல் கட்சியினர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை. 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி செல்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிவதில்லை. இதனை அதிகாரிகளும் கட்டுப்படுத்துவதில்லை.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை எந்த பறக்கும்படையும் சோதனை செய்து அபராதம் வசூலித்ததாக தெரியவில்லை. மாறாக தேர்தல் பறக்கும் படையினர் அப்பாவி வியாபாரிகளிடம்தான் பணத்தை பறிமுதல் செய்து வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிற நிலையில், மாவட்ட நிர்வாகங்களும், தேர்தல் ஆணையமும் கொரோனா விதிமுறைகள் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் தலைவர்கள், சினிமா நடிகைகளை பார்க்க ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்றனர். இவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுமில்லை.
_சக்தி பரமசிவன்
�,