நாஞ்சில் பகுதிகளில் கல்யாண வீடுகளில் சரியான முறையில் பரிமாறவில்லை என்றால், கோபத்தில் விசுக்கென்று எழுந்து போகிறவர்கள் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக ஒவ்வோர் உணவையும் பதம் பார்த்து செய்வார்கள். பார்த்துப் பார்த்து பரிமாறுவார்கள். அவற்றில் ஒன்று இந்த பட்டாணி தேங்காய்ப்பால் கறி. கல்யாண விருந்தில் இந்த கறி நிச்சயம் இடம்பெறும்.
**என்ன தேவை?**
காய்ந்த பச்சைப் பட்டாணி – 200 கிராம்
வெங்காயம் – ஒன்று
தேங்காய்ப்பால் – 2 கப்
கொத்தமல்லி – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**அரைக்க…**
கீறிய பச்சை மிளகாய் – 4
பூண்டு – 10 பற்கள்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
காய்ந்த பச்சைப் பட்டாணியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும் பூண்டுப் பற்களை சேர்த்து வதக்கவும். பிறகு நீளமாகக் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர், அடுப்பை அணைத்துவிட்டு மல்லித்தூள் சேர்த்துக் கலந்து இறக்கவும். அவை ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் அரைத்த பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். அவை வதங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு அதில் உப்பு சேர்த்துக் கலந்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். மசாலா நான்கு நிமிடங்கள் கொதித்து பச்சை வாசனை போனதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
**[நேற்றைய ரெசிப்பி: பாகற்காய் அவியல்](https://minnambalam.com/public/2021/11/17/1/bitter-gourd-aviyal)**
..�,