உணவைக் குறைத்து தேனீரை அதிகப்படுத்திய சிதம்பரம்

Published On:

| By Balaji

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் இப்போது வரை டெல்லி திகார் சிறையில் தான் இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் சிபிஐ கஸ்டடியில் 15 நாட்கள் இருந்து அதன் பிறகு நீதிமன்ற காவலுக்கு மாற்றப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கீழமை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அடுத்து உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டும் முயற்சியில் சிதம்பரத்தின் வழக்கறிஞர்கள் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில் திகாருக்குள் சிதம்பரம் எப்படி இருக்கிறார்?

வாரந்தோறும் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சிதம்பரத்தை குடும்பத்தினர் சென்று சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி ஆகியோர் அவரை சந்திக்கிறார்கள். அப்போது ஒரு வெள்ளைத் தாளில் தன் கருத்துக்களை எழுதி அதை அவர்களிடம் சிதம்பரம் கொடுக்கிறார். அதைத்தான் சிதம்பரத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடும்பத்தினர் வெளியிடுகிறார்கள்.

சிதம்பரத்திற்கு திகார் சிறையில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக ஒரு வாரத்திற்கு 1,500 ரூபாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பணத்தை கட்டி டோக்கனை சிதம்பரத்திடம் கொடுத்து விடுகிறார்கள். தினமும் க்ளீன் ஷேவ் செய்யும் பழக்கம்கொண்ட ப சிதம்பரம் அதற்குத் தேவையான ஷேவிங் க்ரீம், ரேஸர் போன்ற பொருட்களை வாங்க இந்த டோக்கன் மூலம் செலவு செய்து கொள்கிறார்

அதேபோல வெளியில் இருக்கும் போது ஒரு நாளைக்கு இரண்டு தேனீருக்கு மேல் அருந்தும் பழக்கம் இல்லாத சிதம்பரம் சிறைக்குள் ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் தேனீர் அருந்துகிறார். உணவைக் குறைத்துக் கொண்டு தேனீரை அதிகப்படுத்தி விட்டார். இதனால் அவரது உறவினர்களும் குடும்பத்தினரும் கவலை அடைந்துள்ளனர். வழக்கமான குறைந்த அளவு உணவையாவது எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

சிதம்பரத்தோடு மிக நெருக்கமாக பழகிய அவரது உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டிருக்கிறார்கள். அப்பாவிடம் கேட்டுச் செல்வதாகக் கூறிய கார்த்தி இது பற்றி சிதம்பரத்திடமும் கேட்டிருக்கிறார்.

’என்ன ஜெயில்ல வச்சி பாக்குறதுல அவங்களுக்கு என்ன ஆசை? அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு’ என்று அதை மறுத்து விட்டார் சிதம்பரம்.

.

சிதம்பரத்தோடு நாற்பதாண்டுகளாக கூடவே இருக்கும் இலக்கியா நடராஜன் அவரை சந்திக்க முடியாமல் ஒரு கடிதத்தை சிறைக்கு அனுப்பி இருக்கிறார். அதைப் படித்துப் பார்த்த சிதம்பரம் அதற்கு பதில் கடிதம் எழுதி இலக்கியா நடராஜனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இப்படித்தான் கழிகின்றன சிதம்பரத்தின் சிறைப் பொழுதுகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share