பட்டினத்தாரின் வாய்க்கால்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

அன்பு!

அது ஒன்றே இந்த பூமிச் சகடத்தின் அச்சு. அது ஒன்றுதான், இதுகாறும் மண் தோன்றி வந்த மதங்கள் அனைத்துக்கும் ஆதார சொத்து. உலகார்ந்த சமயங்களுக்கு எல்லாம் அதுவே மூல வித்து.

அன்பில்லையேல், அரவணைப்பில்லை. அரவணைப்பு இல்லையேல், ஆசுவாசம் இல்லை. ஆசுவாசம் இல்லையேல், உயிர்களுக்கு நிம்மதி இல்லை. நிம்மதி என்பது இல்லையென்றால் அமைதி என்பது இல்லை. அமைதியில்லையேல், இப்பூவுலகில் வாழ்க்கைக்குண்டான அடுத்த கட்டம் என்பது இல்லவே இல்லை.

அன்புக்கு எதிர்மறை எது? ஆணவம்!

ஆணவம்தான், அன்பை அழிப்பது.

அன்பின் வழிபட்ட ஏசு கிறிஸ்துவைக் கொல்கதாப் பாதை எங்கிலும் முள் மகுடம் தாங்கி மலையேற ஏற, சவுக்கடிக் கொடுக்க வைத்தது எது? பெரிய ஏரோதுவின் ஆணவம்.

சிசுபாலன் துணையோடு, “அடேய் மாட்டுக்காரா…” என்று ஆரம்பித்து நூறு கேள்விகளால் கிருட்டிணனை அவமானப்படுத்தி அனுப்பியது எது? துரியனின் ஆணவம்!

குரைஷிப் போரில், தன் நெருங்கிய உறவினரின் பெருங்குடலைப் பிடுங்கி எறியும் துர்பாக்கியக் காட்சியைக் காணும் நிலைமைக்கு நபிகளைக் கொண்டு நிறுத்தியது எது? அன்றைய ஆட்சியாளர்களின் ஆணவம்!

சூனிய சோனிக் கிழத்தியின் துணைகொண்டு, ஒரு லட்சம் தமிழ் குஞ்சு குளுவான்களை முள்ளி வாய்க்காலின் கரையெங்கிலும் செதுக்கிச் சாய்த்துக் கெக்கலித்தது எது? ராஜபக்க்ஷேவின் ஆணவம்!

மொத்தமும், அன்பை மறந்த அவக்காலக் கோலமே அன்றி வேறென்ன?

‘அன்பு’ என்பதை அறவே மறந்து, ஆணவத்தின் பாற்பட்டு, வழக் கொழிந்தவர்களுக்கு, வாழ்வின் பொருளை ‘ஞானியர் மொழி’யின் வாயிலாக எடுத்துரைத்து, வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு இட்டுச் செல்ல வேண்டிய கடமை நமக்குண்டு.

அறியாமை கொண்டோரின் அந்த ஆணவம், எதன் பாற்பட்டு எழுகிறது? ஆணவத்தின் மூலக் கதுப்பு எது? ‘நான்’ என்னும் அகங்காரம் மட்டுமே.

அதை அழிப்பது எப்படி?

அந்தச் சூட்சுமத்தை, தமிழ் மண்ணுக்கே உரிய, பட்டவர்த்தனம் உமிழும், வார்த்த மொழியைக் கையாண்டு, ‘ஏ, மானிடனே, இதுதான் உண்மை. இது புரிந்தால் உனக்கு நிம்மதி. புரிந்து கொள்! முடிந்தால், வாழ்ந்து கொள்…’ என்று தனது துறவி மொழிகொண்டு, போதித்துப் போனார் ‘ஞானத் தமிழ் வள்ளல்’ பட்டினத்தார்!

இனி, அவர் வழி காண்போம் !

ஆன்மா – உடல் இவ்விரண்டில், ஆன்மாவுக்கு ஆணவம் கிடையாது,

உடலெடுத்த கருமத்துக்கே எல்லாம் உண்டு.

அவன், பயில்வானோ – பணக்காரனோ, நோஞ்சானோ – நோயாளியோ, பஞ்சாயத்தானோ – பாமரனோ அனைவருக்கும், ‘உடல்’ என்ற ஒன்று இருக்கும்வரைக்கும் ‘நான்’ என்னும் ‘ஆணவ மலம்’ இருக்கத்தான் செய்யும்.

அந்த ஆணவ மலம்தான், அடுத்தவரின் மேல் தன் வைப்பினையை வாறி எறிந்து, நாறப் பரப்பி, இந்தச் சமூகத்தை ஓயாமல் பாழ் செய்தபடி இருக்கிறது.

உடலின் பாற்பட்டதே ஆணவம். இந்த பாழும் உடலை சரிவரப் புரிந்து கொண்டுவிட்டால், ஆணவ மலம் அழிந்து, அன்பு தழைத்துவிடலாகும் என்கிறார் பட்டினத்தார்.

இந்த உடல் என்பது என்ன?

“மணமாய் கிடக்கும் வடிவின் முடிவில் பிணமாய் கிடக்கும் பிண்டம் – பிணம் மேல், ஊரில் கிடக்க ஒட்டா உபாதி…” என்கிறார்.

‘கால்வின் க்ளெய்ன் செண்ட்’ போட்டுக்கொண்டு, ஆடி காரில் வந்து இறங்கி, அலப்பறை செய்பவன் என்றாலும்கூட… ஒரு நாள், உயிர் நீங்கி ஊரின் நடுத் திடலில் கிடத்தப்படும்போது, அவன் மேல் பிண நாற்றம் மட்டுமே மிச்சம்.

“இனிமேலும், பிணத்தை இங்கே வைத்திருந்தால் ஊருக்கு ஆகாது, குழந்தைகளுக்கு வியாதி பரவக்கூடும். உடனடியாக தூக்கி விடுங்கள்” என்று ஊரார் இடுகாட்டுக்குத் தூக்கிவிட அவசரிப்பார்கள் என்கிறார் பட்டினத்து அடிகளார்.

மேலும் சொல்கிறார்…

‘அடலைப் பெரிய சுடலைத் திடர்’

இறந்தவர்களைப் புதைக்கும் இடத்தை சுடுகாடு என்கிறீர்களே… இந்த உடலை விடவா பாழும் சுடுகாடு உண்டு?

இறந்த கோழி, இறந்த ஆடு, இறந்த மாடு மற்றும் இறந்த காய்கனிகள் சகலவற்றையும், நறுக்கிப் புதைக்கும், இடுகாடல்லவா இந்த உடல்? இதன் மேல் என்ன உங்களுக்கு இத்தனை ஈகோ என்கிறார்.

இந்த உடல் ஆகப்பட்டது,

‘நான்முழத்தொன்பது பீற்றத் துண்டம்;

பேய் சுரைத் தோட்டம்!’ என்கிறார்.

‘நான் முழத்தொன்பது’ – ஒரு முழத்துக்கு இரண்டு சாண். ‘எண் சாண் உடல்’ என்பதை சுருக்கி, ‘நான்கு முழம்’ என்கிறார். ஒன்பது என்பது, உடலுக்கு உண்டான நவத் துவாரங்கள்.

மொத்தமாக, நான்முழத்தொன்பது என்கிறார்.

‘பீற்றத் துண்டம்’ – உடலின் தோல், உடளலவில் ஏறத்தாழ 20 சதுர அடிக்கு உள்ளானது. டெய்லர் கடையில் தூக்கி எறியப்படும் பீற்றத் துண்டம் போல, நம்முடைய உடற்தோல் ஒவ்வொரு நாளும் உரிந்து, உரியப்பட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

‘சுரைத் தோட்டம்’ – உடலின் உள்ளுக்குள்ளே குடல்கள் எல்லாம், சுரைத் தோட்டங்களில் தொங்கும் சுரைக்காய்கள் போல நெளிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றனவாம்.

‘பேய் சுரைத் தோட்டம்?’ பஞ்சமா பாதகங்கள் ஆகப்பட்ட மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொய் மாயப் பேய்கள் அனைத்தும் கூடி ஒன்றுலாவும் சுரைத் தோட்டம் இந்த உடல் என்பவர்…

ச்சீச்சீ…

‘நான்முழத்தொன்பது பீற்றத் துண்டம்;

பேய் சுரைத் தோட்டம்’ என்று மொத்தமாய் வீழ்த்தி சொல்கிறார்.

மேலும்,

‘ஈமக் கனலில் இடு சில விருந்து;

காமக் கனலில் கருகும் சருகு!

விதிவழித் தருமன் வெடும் கட்டை

சதுர் முகப் பாணன் தைத்த சட்டை’ என்கிறார்.

அதாவது, நான்கு முகங்களைக்கொண்ட பிரம்மனாகப்பட்டவன் ஆன்மாவுக்காக ப்ரத்யேகமாக தைத்த ஓர் சட்டைதான் இந்த உடல். இது நையாமல் வேறென்ன செய்யும் என்று எள்ளி நகையாடுகிறார்.

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம் என்கிறார். ஓடு மரக்கலம் என்கிறார். ஓயா நோக்கிடம் என்கிறார்.

உச்சகட்டமாக சொல்கிறார்

‘மாயா விகாரம் – மரணப் பஞ்சரம்’

பஞ்சரம் என்றால் கூண்டு. இந்த பாழும் உடல் என்பது மரணம் என்னும் ஓர் பறவை வந்து தங்கிக்கொள்ளப் படைக்கப்பட்ட ஒரு கூண்டு என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதென்ன மாயா விகாரம்?

தோன்றியதெல்லாமே அழியும், மறையும். ஆகவே, எல்லாமே ‘மாயை’ தானே? ஆனால், இந்த மனித உடலை, ஏன் ‘மாயா விகாரம்’ என்று தூற்றுகிறார்?

பட்டினத்தாரின் ‘துறவி மொழியை’ வியந்து ஏற்றுக்கொண்டாக வேண்டிய அற்புதமான கட்டம் இது!

சிங்கம், புலி, கரடி என்பவைகளெல்லாம் விலங்குகள்தான். அவைகளும் தோன்றும், அழியும்தான். அவைகளும் மாயைதான்.

ஆனால், இந்த மனித உடல் அப்படியா? எண்ணிப் பாருங்கள்.

விலங்காகப்பட்ட ஒரு புலியானது நான்கு கால்களும் நிலத்தில் பாவ அழகாக நின்றிருக்கும். அதன் உடலோ, நேர்க்கிடைக் கோட்டில் கிடந்து அழகாக நகரும். அதற்கு, முன்னே ஓர் தலை உண்டு. ஈடாக பின்னே ஒரு வால் உண்டு. அனிமேஷன் ஃபார்மேட்டில் இதனை ஃபோர்லெக்ஸ் பேலன்ஸ் என்பார்கள். அதில் ஓர், நேர்த்தியுண்டு. அழகான அசைவுண்டு.

ஆனாலும், நிமிர்ந்து நிற்கும் பாத்தியதைப் பெற்றுவிட்டாலும்கூட, இந்த பாழும் மனித உடலுக்கு அந்த அழகுண்டா? என்று எள்ளி நகையாடுகிறார் பட்டினத்து அடிகள்.

எழுந்து நடக்கும் மனிதனைக் கண்கொண்டு பார்க்க முடியுமா? அவனது, இரண்டு கைகளும் இரு புறமும் தொங்கி, முன்னும் பின்னுமாக அளாவிய படியே உடன் வருகின்றனவே? அவைகளுக்கு ஏதும் ஆதாரம் உண்டா? ஆதாரம் ஏதும் இல்லாமல், அசைந்தாடி முன்னேறும் மனித உருவம் அபாண்டமல்லவா?

கால்கள் என்று இரண்டு கீழே நீண்டிருக்க, இடையே ஒரு சிலிண்டர் போல உடலும், வயிறும், பின்னே ஓர் பிட்டமும் கொண்டு அலமங்கலமாக முன்னும் பின்னுமாக முன்னேறி நகர்ந்து வரும் இந்த மானுட உருவம் கொண்டேற்றுக் கொள்ள முடியாத கண்றாவியல்லவா?

மானுடர்களைக் காட்டு வெளியினில் அசந்தர்ப்பமாக காண சம்பவித்து விட்டால், விலங்குகள் எல்லாம் சட்டென விலகி நகர்ந்து போகின்றனவே? ஏன்? அசூயை கொண்டல்லவா?

ஆம், மானுட உடல் என்பது அசூயை, விகாரம்!

அதனால்தான் அடித்துச் சொல்கிறார் பட்டினத்தார்…

‘மானுடனே கேள்… விலங்குகள் தோன்றும். அழியும். அவைகளை நான் மாயை என்று ஏற்றுக்கொள்வேன். நீயும் கூட, தோன்றி மறைபவன்தான் என்றாலும், நீயும் – விலங்கும் ஒன்றல்ல…! உனக்கு “மாயை”என்னும் அந்தஸ்த்தை என்னால் வழங்கி விட முடியாது. நீ, அசூயையானவன், மாயையின் ‘விகாரத் தோற்றம்’ கொண்டவன்!

மாயா விகாரமான உனக்கு, இந்த ஆணவம் அதிகமல்லவா என்கிறார்.

பட்டினத்தாரால் இழித்து உரைக்கப்படும் இந்த மானுட விகாரத் தோற்றத்தை எது கொண்டு அழித்து விட முடியும்?

அன்பு என்ற ஒன்றைக்கொண்டு மட்டுமே அழித்து உய்ய முடியும்!

அந்த அன்பாகப்பட்டது எங்கிருக்கிறது? அண்ட சராசரத்தில் எங்கும் பறந்து விரிந்தே இருக்கிறது. அந்த ‘அன்பை’ நாம் ஓயாமல் தேடிக் கொண்டடைந்தாக வேண்டும்!

கேளுங்கள்.

நாமெல்லோரும், காலை குறுக்கே மடக்கியமர்ந்து கொண்டு, தியானம் செய்கிறோம் அல்லவா? யாரை நோக்கி சிவனை நோக்கி!

போலவே, சிவனும் காலை மடக்கி, விழி மூடி, தியானம் செய்வதாக ஓர் தோற்றத்தையும் காண்கிறோம் அல்லவா?

நாம் தியானம் செய்வது சிவனை நோக்கி என்றால் , அந்த சிவனும் தியானம் செய்கிறாரே! யாரை நோக்கி? அவருக்கும் மேலான ஒரு சக்தி இங்கே உண்டா எனில், உண்டு.

அது எது? சிவம்!

சிவம் என்பது என்ன? அன்பு!

ஆம், சிவம் என்பது ‘பரிபூரணமான அன்பு’.

சிவன்? அது, அன்பின் ஸ்தூல வடிவம்.

ஸ்தூல வடிவமாக இருக்கும் ‘சிவன்’, ‘சிவம்’ என்னும் ‘அன்பை’ உலகெங்கும் பரவச் செய்ய, ஓயாது தியானம் செய்கிறான் என்றே பொருள்.

அது, கிழக்குத் திசையாளும் புத்தனாகவும் இருக்கலாம். கொல்கதாப் பாதைச் சிலுவையில் தொங்கிய கிறிஸ்துவாகவும் இருக்கலாம். மேற்குத் திசை இலங்கும் காபாவாகவும் இருக்கலாம். எல்லாமே ஸ்தூலங்களே. அவைகள் போதிப்பது ஒன்றே. அது, அன்பு.

அன்பு என்பது வெள்ளந்தியாக வாழத் தலைப்படும் மாந்தர்களுக்கு மட்டுமே உரித்தானது. அந்த அன்புதான், கம்ப நாடகத்தில், வேட்டுவக் குகனையும், குரக்கினத்து அனுமனையும், அரக்கர் கோமான் வீடணனையும் தம்பியராகக் கொள்ளச் செய்தது.

அப்படிப்பட்ட வெள்ளந்தியான அன்பை, ஆணவம்கொண்டு ஆழப் புதைத்து விட்டதால்தான், அந்த முள்ளி வாய்க்கால் இன்றளவும் விம்மிக்கொண்டு இருக்கிறது. என்றேனும் ஒரு நாள், அந்த மெய்யன்பு விதிர்த்துப் புடைத்து, வெளிப்படாமல் போகாது.

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்பது வள்ளுவம்.

வள்ளுவம் பொய்க்காது!

கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா…

திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994-லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதை தமிழுக்காகப் பெற்றுத்தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share