பரியேறும் பெருமாள்- தமிழ் சினிமாவின் திசையை நகர்த்திய விசை!

public

பிரதாப் பாஸ்கரதாஸ்

(பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி ஓர் அலசல்)

தமிழ் சினிமா அதன் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான சினிமாக்களைப் பார்த்திருக்கிறது. மௌன சினிமா என்ற ஒரு காலகட்டம் கடந்து தற்பொழுது மாயக்கண்ணாடி அணிந்து சினிமா பார்க்கும் காலத்தையும் கடந்து தொழில்நுட்பத்தின் தோள்களில் விரைவாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆன்மீகம், காதல், பாட்டாளிப் புரட்சி, சாதி கௌரவம், பாசம், பெண்களுக்கு புத்திமதி, அரசு, ஊழல், அரசியல், அனிமேஷன் என தமிழ் சினிமா பல படிமானங்களாக மாற்றமடைந்து வந்துகொண்டிருக்கின்றது.

சாபமோ அல்லது தைரியமின்மையோ தெரியவில்லை, சாதி மறுப்பு சினிமா என்றால் மட்டும் கண்,காது,வாய் மூடிய குரங்காக தமிழ் சினிமா மாறிவிடும். கால ஓட்டத்தில் எங்கோ ஒர் மூலையில் அத்திப்பூப் பூத்தாற்போல சாதிக்கு எதிரான ஓரிரண்டு சினிமா வந்தபோதிலும் அதன் தாக்கமென்னவோ காற்றில் கரைந்த கற்பூரவாசம் தான். சினிமா என்பது வர்த்தகத்தையும் உள்ளடக்கியதால் அது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற பொதுப்புத்தியும் இங்குண்டு.

தமிழ் சினிமாவில் எழுதப்படாத சட்டமாக நீதிமன்றம் மற்றும் காவல் நிலைய காட்சிகளில் மட்டுமே அம்பேத்கரை காட்டுவது அல்லது சில குறிப்பிட்ட சமுதாய மக்களை காட்சிப்படுத்த அம்பேத்கர் சிலையை காட்டிவிட்டு சில குடிசைகளை காட்டுவது சினிமாவின் வழக்கமான உத்தியாக இருக்கும். ஆனால் கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் முன்பை விட அம்பேத்கரையும் சாதி எதிர்ப்பையும் தமிழ் சினிமாவில் ஓரளவிற்கு அதிகமாகவே காணமுடிகிறது. இதற்குக் காரணம் சினிமாவின் எழுதப்படாத சட்டம் மாறிவிட்டதா அல்லது தமிழ்நாட்டில் அனைவரும் சாதியை தூக்கியெறிந்துவிட்டார்களா என்றால் அது மிகையாகும். ஆனால் தமிழ் சினிமாவில் சாதி எதிர்ப்பு பேசி அது பொது நீரோட்டத்தில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொண்ட படமென்றால் அது ஓரே ஒரு படம் தான்.

அது கடந்த 2018 செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவுசெய்யும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’. அது எப்படி இத்தனை ஆண்டு தமிழ் சினிமாவில் அதுவும் பல சாதிகளை கொண்ட தமிழகத்தில் ஒரு படம் சாதி ஒழிப்பைப் பேசி, இத்தனைப் பாராட்டுகளைப் பெறமுடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் தமிழ் சினிமா கடந்து வந்த பாதையானது ஒருபொழுதும் இப்படியான ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திரவில்லை. இங்கே ஒரு படம் நல்ல படம் என்பதை தாண்டி அது வெற்றிப்படமா என்பதை தீர்மானிப்பது அதன் வணிகம் தான். அப்படி இருக்கும்பட்சத்தில் ஒரு படம் மற்ற படங்களைப்போல் அல்லாமல் வழக்கத்திற்கு மாறான ஒரு தன்மையைக்கொண்டு அதுவும் சாதி எதிர்ப்பை உரக்க பதிவு செய்த ஒரு படமானது, நல்ல சினிமா என பெயரெடுக்க முடியும். ஆனால் எப்படி வணிக சினிமாவாக வெற்றிப்பெற்றிருக்க முடியும் என்ற கேள்வி முக்கியமானதாகும்.

அதற்கான விடையை அறிய நாம் பரியேறும் பெருமாள் படத்தில் உள்ளிருக்கும் அரசியல் மற்றும் பரியேறும் பெருமாளை சுற்றி நிகழ்ந்த அரசியலை ஆராயும்பட்சத்தில் அறியமுடியும்.

இங்கே ஒரு சாதாரண திரைப்பட பார்வையாளனின் மனநிலையானது அவன் ரசிக்கக்கூடிய இடத்திலிருப்பவர்களை அதிகம் சார்ந்திருக்கிறது. அதுவும் தற்பொழுது சமூக ஊடகங்கள் ஒரு சாதாரணப் பார்வையாளனின் ரசிப்புத்தன்மையை தீர்மானிக்கக்கூடிய ஒரு கருவியாகவும் மாறிவிட்டது . இந்த மனிதக்கருவிகள் அனைவரும் தங்களை ஒரு சமூக சமத்துவத்தை எதிர்நோக்குபவராக காட்டிக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பமாக பரியேறும் பெருமாள் படத்தை பயன்படுத்திக் கொண்டாலும் கூட, பரியேறும் பெருமாளின் குறைந்தபட்ச வெற்றியானது படம் வெளியாவதற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டாகிவிட்டது.

பரியேறும் பெருமாள் படம் மாபெரும் வெற்றிப்பெற்றதை விட அதன் முதல்நாள், முதல் காட்சியே அரங்கம் நிறைந்த காட்சியாக மாறியது தான் பலரால் நம்பமுடியாத, திகைப்பூட்டப்பட்ட , மிக முக்கியமான சினிமாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றமாகும். எந்த ஒரு பெரிய திரைநட்சத்திரமும் படத்தில் நடித்திராமலிருந்தும், எந்த ஈர்ப்புவிசையால் பார்வையாளர்கள் பரியேறும் பெருமாள் பட முதல்நாள் முதல் காட்சியின் அரங்கை நிறைத்தனர் என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.

இங்கே முதல்நாள் முதல்காட்சியை மையப்படுத்தக் காரணம், எந்த ஒரு படமானாலும் அப்படத்திற்கு முதல்நாள் காட்சிகளின் நிலையானது அப்படத்தில் தங்களுக்கு மிகப்பிடித்தத் திரை நட்சத்திரங்களோ அல்லது பொழுதுபோக்கு அம்சங்களோ அல்லது தத்தமது பிடித்தம் சம்மந்தப்பட்ட கொள்கை நிலைப்பாடு பொறுத்து தான் அமையும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பரியேறும் பெருமாள் எந்த ஒரு ரசிகர் மன்றமுள்ள திரைபிரபலமும் நடித்திராத படமாக இருந்தும், மேலும் சொல்லப்போனால் வெறும் சமூக சமத்துவத்தை முன்னிறுத்தும் படமாக இருந்தும், அதை பார்ப்பதற்கு முன்பாகவே முதல் நாள் முதல் காட்சிக்கான கூட்டம் எதை எதிர்பார்த்து வந்திருந்தார்கள், அந்த எதிர்பார்ப்புகளுக்கான ஈர்ப்பு எதன் அடிப்படையில் வந்திருந்தது என்பதை ஆராயவேண்டும்.

பார்வையாளர்கள், கொண்டாட்டம் நிறைந்த படமாக இதைப் பார்க்கச் செல்லவில்லை, தங்களுடைய விருப்பமான திரை நட்சத்திரத்தைப் பார்க்கச் செல்லவில்லை. தங்கள் சாதிமதத்தை உயர்த்திக் காட்டுகிறார்கள் என்று பார்க்க செல்லவில்லை. முழுக்க முழுக்க சமூக சமத்துவத்திற்கான கேள்வியை எழுப்பிய பரியேறும் பெருமாளை பார்க்க முதல்நாள் முதல் காட்சிக்கே இவர்களை எது உந்தியது என்பது நம்பமுடியாத பெரும் ஆச்சரியம் தான்.

பரியேறும் பெருமாளுடைய முதல் நாள் முதல் காட்சி பார்வையாளர்கள் மற்றும் பார்க்க ஆவலாய் இருந்தவர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டின் ஒரு படியாக அதைப் பார்ப்பதற்காக அரங்கை நிறைத்தக் காரணத்தை அறிய, அவர்களுக்கு உள்ள சினிமா அறிவை ஆராயவேண்டியது அவசியம். பரியேறும் பெருமாள் படத்திலுள்ள அரசியலை எப்படி அவர்களால் முன்கூட்டியே புரிந்துகொள்ள முடிந்தது என்பது தான் பரியேறும் பெருமாளுக்கு முன்னரே சினிமாவில் நிகழ்ந்த அரசியல் மாற்றமாகும்.

இதற்கு மிக முக்கிய காரணத்தை அறிய நாம் நவீன சினிமா யுகமான 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி முதல் இரண்டாண்டு முன்பு வெளியான காலா வரை பார்க்கவேண்டும் (பரியேறும் பெருமாளை தவிர்த்து). தமிழ் சினிமா பல கலவையான ரசனைகள் கொண்ட பார்வையாளர்களை கொண்டுள்ளது. அதுவும் குறிப்பாக எதார்த்தமற்ற பிரமாண்ட சினிமா, இரத்தம் தெறிக்கும் raw cult சினிமா மற்றும் இதுதான் காதல் என்று அனைவரையும் நம்பவைக்கும் சினிமா என சில வகையான சினிமாக்களுக்கும் , குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்கு என பார்வையாளர்களும் இருக்கும் வேளையில் தான் பரியேறும் பெருமாள் உட்பட அதன் வடிவிலான படங்களான மெட்ராஸ், கபாலி, காலா, மாவீரன் கிட்டு போன்ற ஒடுக்குமுறைக்கு எதிரான சமத்துவத்தை முன்னிறுத்தும் படங்களுக்கானப் பார்வையாளர்கள் அணிதிரண்டனர்.

இதை ஒரு தன்னிச்சையான நிகழ்வாகவோ அல்லது சாதாரண நிகழ்வாகவோ கண்டிப்பாக பார்க்கமுடியாது, ஏனென்றால் இத்தனைக்கால தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட சில ரக படங்களுக்கென குறிப்பிட்ட சில பார்வையாளர்கள் கூட்டம் இருக்கும்போது, சமத்துவத்தை முன்னிறுத்தும் படங்களுக்கென புதிதாக ஒரு பார்வையாளர் கூட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை இங்கே விளங்கிக்கொள்ளவேண்டும். மேலும், மற்ற வகை சினிமா பார்வையாளர்களை போல் இவர்கள் பொழுதுப்போக்கிற்கு படம் பார்த்துவிட்டு நகர்ந்துவிடாமல், மேலும் திரைப்படங்களின் ஊடாகவும் திரைப்படங்கள் மூலமாக அரசியல் புரிகிறார்கள், அரசியல் அறிகிறார்கள், சமத்துவம் பேசுகிறார்கள், ஒடுக்குமுறைக்கு எதிராக சற்றேனும் அணிதிரள்கிறார்கள். அனைத்தையும் தாண்டி,இம்மாற்றமானது கடந்த இரண்டு ,மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் நடந்தேறியுள்ளது தான் பேராச்சரியம்.

பரியேறும் பெருமாளுக்கான முதல் நாள் முதல் காட்சிக்கு வந்த கூட்டம் , அட்டக்கத்தி படத்தையோ அல்லது மெட்ராஸ் படத்தையோ முதல் நாள் முதல் காட்சிக்கு இப்படி ஓடிச்சென்று பார்க்கவில்லை. மேலும் அட்டக்கத்தி மற்றும் பரியேறும் பெருமாள் படங்கள் வெளியான இடைப்பட்ட காலத்தில்தான் இந்த பார்வையாளர்களுக்கான இந்த ஈர்ப்பு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் இதே பார்வையாளர்கள் கபாலி ,காலா ஆகிய படங்களுக்கும் படையெடுத்தனர். அட்டகத்தி படமானது ஒரு காதல் படமாக பார்க்கப்பட்டு கடந்துவிட்டாலும், அதற்கடுத்து வந்த மெட்ராஸ் படத்தில் தொடங்கியது இந்த பார்வையாளர்களின் அணிதிரள்வு.

அட்டகத்தி,மெட்ராஸ்,கபாலி,காலா படங்களில் பேசப்பட்ட அரசியலும், அப்படங்களினால் ஏற்பட்ட உரையாடல்களும், மேடைப் பேச்சுக்களும், நேர்காணல் விவாதங்களும் அதிலிருந்த ஒடுக்கப்பட்டவரின் உரிமைக்குரலும் ஒடுக்கப்பட்டவர்களை சமத்துவத்தை நோக்கிய உரிமைக்குரலாக கிளர்ந்தெழுப்பியது என்றால் அது மிகையாகிவிடாது. மேலும் அவர்களுக்கு தேவையான சமூக சமத்துவத்தை போதிக்கும் சினிமா வரத்தொடங்கிவிட்டத்தை அதன்மூலம் அவர்கள் உணர்ந்துவிட்டனர். மேலும் இதன் மூலம் இங்கே ஒரு புதிய பார்வையாளர்கள் கூட்டம் மட்டும் உருவாகாமல் சினிமாவின் உள்ளே அரசியலை அலசும் பார்வையாளர் கூட்டமும் உருவாகியுள்ளது புலப்படும்.

இவ்வாறு கிளர்ந்தெழுப்பப்பட்டதே பரியேறும் பெருமாளுக்கான முதல் நாள் முதல் காட்சிக்கான ஈர்ப்பானது என்பது நிரூபணமாகும். அதுவே இப்பார்வையாளர்களின் சாட்சியான பரியேறும் பெருமாள் உட்பட அந்த அரசியலை கொண்டுவரவிருக்கும் அனைத்து படங்களுக்கு கிடைத்த, கிடைக்கப்போகிற மாபெரும் வெற்றியாகும்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *