hமெரினாவில் உயிர் காக்கும் படை ஒத்திகை!

Published On:

| By admin

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவ்வப்போது கடலில் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு வழிகாட்டுதல் படி “மெரினா உயிர் காக்கும் படை” கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று 2ஆவது கட்டமாக மெரினா உயிர் காக்கும் படையில் சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு காவலர் நலன் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ் குமார் யாதவ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், பொதுமக்கள் கடலில் குளிக்கும் போதும், விளையாடிக் கொண்டிருக்கும் போது கடல் அலையில் சிக்கி தத்தளிப்பவர்களை சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் மீட்பது, அவர்களுக்கு முதலுதவி அளிப்பது போன்ற ஒத்திகையை வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், “மெரினாவில் ஒவ்வொரு நாளும் கடல் அலையில் சிக்கி 2 அல்லது 3 பேர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வந்தது. இதனை தடுக்க மெரினா உயிர் காக்கும் படை தொடங்கப்பட்டது. இந்த பிரிவில் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற சிறப்பு போலீசாரும் உள்ளனர். இந்த பிரிவு தொடங்கப்பட்ட 6 மாதங்களாக உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.” என்று தெரிவித்தார்.

கடந்த 5 மாதங்களில் கடலில் சிக்கி தத்தளித்த 24 பேரை இந்த உயிர் காக்கும் படை கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த பிரிவு மேலும் மெருகேற்றப்பட்டு பாதுகாப்பை அதிகப்படுத்துவதற்காக, கூடுதலாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளித்து கடற்கரைக்கு வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share