Jரிலாக்ஸ் டைம்: பனீர் டிக்கா!

Published On:

| By Balaji

பனீரில் கொழுப்புச்சத்து அதிகம், அதைச் சாப்பிட்டால் எடை கூடும் என்று அதை ஒதுக்குபவர்கள் பலர். கடைகளில் விற்கப்படும் பனீர் உணவு வகைகளைத் தவிர்க்கலாம். ஆனால், வீட்டில் தாராளமாகச் சமைத்துச் சாப்பிடலாம். பனீரில் கொழுப்புச்சத்து மட்டுமன்றி புரதம், கால்சியம், மக்னீசியம் எனப் பல்வேறு சத்துகள் உள்ளன. கடைகளில் விற்கப்படும் பனீர் உணவுகளில், சுவைக்காக மசாலாப் பொருள்கள் அதிகம் சேர்க்கப்படும். கூடவே செயற்கை நிறமிகள், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) போன்றவையும் சேர்க்கப்படும். பல நேரங்களில் எண்ணெயில் அதை அதிகமாக வறுப்பார்கள். இதனால், அதிலுள்ள சத்துகள் அழிந்து கலோரிகள் அதிகரித்துவிடும். அது ஆரோக்கியமற்றது. ஆனால், வீட்டிலேயே ஹெல்த்தியாகச் செய்து சாப்பிடும்போது, இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். ஃப்ரூட் சாலட், ஜூஸுடன் சேர்த்துச் சாப்பிடும்போது ஒரு வேளைக்கான உணவாக இதை வைத்துக்கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?

தேவையான அளவு கடலை மாவு, அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் தயிர் என அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மசாலா தயார் செய்துகொள்ளவும். அதில், தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும். இந்த மசாலாவில் நறுக்கிய 100 கிராம் பனீர், வெங்காயம் ஒன்று, தக்காளி ஒன்று , குடமிளகாய் ஒன்றைத் தனித்தனியாகப் புரட்டி எடுத்து தனித்தனிக் கிண்ணங்களில் வையுங்கள். புரட்டி எடுத்த பொருள்களை, அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தால் அவை நன்றாக ஊறிவிடும். அரை மணி நேரம் கழித்து பனீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் போன்றவற்றை பல் குத்தும் குச்சி (டூத் பிக்) ஒன்றில், ஒவ்வொன்றாக வரிசையாகக் குத்திக்கொள்ளுங்கள். டூத் பிக் இல்லையென்றால், நீளமான கம்பியைப் பயன்படுத்தலாம்.

தவாவில், ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு அதன்மீது குச்சிகளைவைத்து நன்றாக கிரில் செய்ய வேண்டும். உணவு கருகிவிடும் என்பதால் மிகக் குறைவான தீயில்வைத்துச் செய்யவும். புதினா சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு

கார்ன்ஃப்ளார், கேசரி கலர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

சிறப்பு

பனீரிலுள்ள புரதச்சத்தும் கால்சியமும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எண்ணெய் தவிர்க்கப்படுவதால், இதய நோயாளிகளுக்குக்கூட இந்த ரெசிப்பி நல்லது. ‘உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், நிறைய புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தப்படுவார்கள். எனவே, எடையைக் குறைக்கும் முயற்சிகளில் இருப்போருக்கும் ஏற்ற ரெசிப்பி இது.

பனீரிலுள்ள மக்னீசியம் சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதிலுள்ள பாஸ்பரஸ் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும். வைட்டமின் பி நிறைந்தது என்பதால் பனீர், கர்ப்பிணிகளுக்கும் மிகவும் நல்லது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share