சைவ உணவுக்காரர்களுக்கு புரதத் தேவையை நிறைவேற்றுவதில் பனீருக்கு முக்கிய இடமுண்டு. பனீரில் என்ன வேண்டுமானாலும் சமைக்கலாம்… சொன்னபடியெல்லாம் கேட்கும். குழந்தைகளின் ஃபேவரைட் என்பதால் அம்மாக்களுக்கு பனீர் சமையல் எப்போதும் சந்தோஷம் தரும். அந்த வகையில் இந்த பனீர் கோஃப்தா குழம்பு செய்து இந்த நாளை அசத்துங்கள். இது நான், ரொட்டிக்கும் சூப்பராக இருக்கும்.
என்ன தேவை?
கோஃப்தா செய்ய…
துருவிய பனீர் – அரை கப்
உருளைக்கிழங்கு (சிறியது) – ஒன்று (வேகவைக்கவும்)
துருவிய கேரட் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள் – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
கடலை மாவு – ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்
சோள மாவு – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
குழம்பு வைக்க…
பிரியாணி இலை – ஒன்று
சீரகம் – கால் டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – ஒன்று
வெங்காயம் – ஒன்று (விழுதாக அரைக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று (அரைக்கவும்)
மஞ்சள்தூள் – சிறிதளவு
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
துருவிய பனீருடன், வேகவைத்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து அதில் கடலை மாவைக் கலந்து, நன்கு பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
இந்த உருண்டைகளை சோள மாவில் உருட்டி, ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து, உருண்டைகளை வெளியில் எடுத்து, சோள மாவில் உருட்டி, மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், பிரியாணி இலை, கிராம்பு, பட்டையைப் போட்டு, வாசனை வரும் வரை வதக்கவும். அதில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வாசனை வரும்போது, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் அதில், அரைத்து வைத்த தக்காளியைச் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதன் பிறகு, குழம்பில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து குழம்பு சேர்ந்து வரும்போது, ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து, வாசனைக்காக கரம் மசாலாத்தூள் சேர்த்து, சிறு தீயில் குழம்பைக் கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும். இந்தக் குழம்பை கோஃப்தா மீது ஊற்றிப் பரிமாறவும்.
குறிப்பு
வாசனைக்காக நறுக்கிவைத்த கொத்தமல்லித்தழையையும் குழம்பில் போடலாம். கஸூரி மேத்தி என்று சொல்லப்படும் காய்ந்த வெந்தய இலைகளையும் சேர்க்கலாம். கோஃப்தாவில் முட்டைகோஸ், குடமிளகாய் இவற்றையும் சேர்க்கலாம்.
நேற்றைய ரெசிப்பி: பக்கோடா குழம்பு
.