“இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவுகூட நான் சாப்பிடுவேனா என்று தெரியாது” என்று ஒருவரை சொல்ல வைக்கக்கூடிய உணவு வகையில் சில ரெசிப்பிகள் அமையும். அவற்றில் ஒன்று இந்த பனீர் கோஃப்தா கிரேவி. பொதுவாகவே அனைவருக்கும் பனீரில் செய்யும் உணவுகள் மிகவும் பிடிக்கும். அதற்கு இந்த பனீர் கோஃப்தா கிரேவி உதவும்.
**என்ன தேவை?**
துருவிய பனீர் – 200 கிராம்
உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து துருவவும்)
கடலை மாவு – 4 டீஸ்பூன்
கஸூரி மேத்தி – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கவும்)
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (தோல் சீவி, துருவவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு
**கிரேவிக்கு**
தக்காளி – 200 கிராம் (நறுக்கவும்)
மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு
**தாளிக்க**
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய், கிராம்பு – தலா 2
சீரகம் – கால் டீஸ்பூன்
**பொரிக்க**
எண்ணெய் – 200 கிராம்
**மேலே தூவ**
நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
துருவிய பனீருடன் மற்ற பொருள்களைச் சேர்த்து நன்கு பிசையவும். பனீர், உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் நீரே பிசையப் போதுமானது. போதவில்லையெனில் சிறிதளவு நீர் தெளித்துப் பிசைந்து சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
கிரேவிக்குக் கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் அரைத்து, அரை கப் நீர்விட்டு மிக்ஸியைக் கழுவி, அந்த நீரை விழுதுடன் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
வாணலியில் வெண்ணெயைச் சூடாக்கி, தாளிக்கும் பொருள்களைத் தாளித்து தக்காளி கரைசல் சேர்த்துக் கொதித்து வருகையில் பொரித்த கோஃப்தாக்களைச் சேர்த்து மேலும் 2 – 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
**நேற்றைய ரெசிப்பி: [உருளைக்கிழங்கு கோஃப்தா கிரேவி](https://minnambalam.com/public/2021/01/21/2/potato-gravy)**�,