பீகாரில் கடந்த 30 ஆண்டுகளாகத் தனி ஒருவராகக் கால்வாய் வெட்டி தனது கிராமத்திற்குத் தண்ணீர் கொண்டு வந்த முதியவருக்குத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டிராக்டர் ஒன்றைப் பரிசாக அனுப்பிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் காயா மாவட்டம் கொத்திவாலா கிராமத்தில் லாயுங்கி புய்யான் என்ற முதியவர் வசித்து வருகிறார். கொத்திவாலா கிராமம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியிருக்கும் கிராமமாகும். ஆனால் போதிய நீர் வசதி இல்லாததால் கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் லாயுங்கி தனது கிராமத்திற்கு, அருகே உள்ள மலைப் பகுதியிலிருந்து வெளியேறி வீணாகும் நீரை தனது கிராமத்திற்குக் கொண்டுவர முயன்றுள்ளார். இதற்காகக் கிராம மக்களிடம் உதவி கேட்ட நிலையில் யாரும் உதவ முன்வரவில்லை.
ஆனால் தனி ஒரு ஆளாக அந்த மலைப் பகுதியிலிருந்து நீரைக் கிராமத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இயந்திரம் மற்றும் கிராம மக்கள் உதவியின்றி களத்தில் இறங்கிய லாயுங்கி, மண் வெட்டியும் தனது இரு கைகளையுமே ஆயுதமாகக் கொண்டு 30 ஆண்டுகளாக கால்வாயை வெட்டி வந்துள்ளார்.
லாயுங்கியின் கடின உழைப்பும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. அவர் வெட்டிய கால்வாய் மூலம் மலைப்பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அவரது கிராமத்திற்குத் தண்ணீர் வர தொடங்கிவிட்டது. லாயுங்கியின் கடின உழைப்பு மற்றும் வெற்றி குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் இந்தியா முழுதும் பிரபலமானார்.
அவரது கால்நடைகளுக்கு மட்டுமின்றி தற்போது அந்த கிராமத்தினருக்கே தண்ணீர் கிடைக்கிறது. முதியவரின் இந்த சுயநலமில்லாத செயலுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் லாயுங்கி தனக்கு ஒரு ட்ராக்டர் இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
முதியவரின் செயலை அறிந்த மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயி உருவாக்கியிருக்கும் அந்தக் கால்வாய் எகிப்து பிரமிடு அல்லது தாஜ்மஹால் போன்ற நினைவுச் சின்னங்களுக்கு ஒப்பானது. முதியவரின் செயலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவருக்கு நாங்கள் டிராக்டர் ஒன்றை பரிசாக அனுப்ப விரும்புகிறோம் என்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி கொத்திவாலா பகுதியைச் சேர்ந்த மகேந்திரா டீலரான சித்திநாத் விஸ்வகர்மா என்பவரது மூலம் முதியவருக்கு டிராக்டர் அனுப்பிப் பாராட்டு தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. டிராக்டரை பெற்றுக்கொண்ட முதியவர் லாயுங்கி, தனக்கு டிராக்டர் கிடைக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,”