தமிழகம் முழுக்க பனங்கிழங்கு விற்பனை களைகட்டியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை விற்பனைக்கு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் மழையின் அளவு அதிகம் என்பதால் பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக நடந்துள்ளது. இதனால் ஒரு கிலோ கிழங்கு விலை ரூ.20 முதல் ரூ.40-க்கு விற்கப்படுகிறது.
குறிப்பாக கருப்பட்டிக்குப் பெயர்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் பனங்கிழங்கு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்காட்டுவர். உடன்குடி, மெஞ்ஞானபுரம், குரும்பூர், அம்மன்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியிலுள்ள கிராமங்களில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. அத்துடன் கால்வாய் மூலம் தாமிரபரணி தண்ணீரும் குளங்களில் நிரப்பப்பட்டது. இதனால் நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது.
இதனால் பொங்கல் சீசன் முதல் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி பகுதி வியாபாரிகள் ஒரு கிலோ கிழங்கை ரூ.20 முதல் ரூ.40 வரை ஏலம் எடுத்து, அதை சாக்குகளில் அடுக்கி கட்டி, விற்பனைக்காக ஆம்னி பஸ்களிலும், வேன், லாரி போன்ற வாகனங்களிலும் கொண்டு செல்கின்றனர். மேலும், நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளிலும் பனங்கிழங்கு அதிக அளவில் விளைச்சலாகி உள்ளது. இந்தப் பகுதிகளில் சாலையோரங்களில் பனங்கிழங்குகளை அடுக்கி வைத்து, கட்டுகட்டாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபற்றி பேசியுள்ள உடன்குடி வியாபாரி ஒருவர், “இந்த ஆண்டு தை மாதம் அதிக அளவில் பனங்கிழங்கு வரவில்லை. அதனால் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது. தற்போது பனங்கிழங்கு அதிகமாக விற்பனைக்கு வருகிறது. இதனால் விலையும் குறைந்துள்ளது. பொது மக்களும் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். வெளியூர் வியாபாரிகளும் பனங்கிழங்கை ஆர்வத்துடன் மூட்டை மூட்டையாக வாங்கி செல்கின்றனர். பனைமரம் தொழில் செய்யும் அனைத்து விவசாயிகளும் பனங்கிழங்கு உற்பத்தி செய்வதற்காக பனை மர விதைகளை விதைத்துள்ளனர். இதனால் இன்னும் அதிக அளவில் பனங்கிழங்கு விற்பனைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.