பிளாஸ்டிக்குக்கு மாற்றாக, புது முயற்சியாக பனையோலைப் பெட்டியில் பிரியாணியை பார்சல் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். டிப்ளோமா ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துள்ள இவர், வெளிநாடுகளில் ஹோட்டல்களில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊரான விளாத்திகுளத்தில் பாஸ்ட்ஃபுட் கடை நடத்தி வருகிறார். பாலித்தீன் தாள், பாலித்தீன் பை, பிளாஸ்டிக் டப்பாவுக்கு மாற்றாகப் பனையோலைப் பெட்டிக்குள் வாழை இலையை சிறியதாக மடக்கி வைத்து அதில் பிரியாணியை நிரப்பி பனையோலையை மூடி விற்பனை செய்து வருகிறார்.
ஒருவர் சாப்பிடும் பிரியாணி முதல் 10 பேர் சாப்பிடும் பக்கெட் பிரியாணி வரை அந்தந்த அளவுகளிலான பனையோலைப் பெட்டிகளில் பார்சல் போட்டுக் கொடுக்கிறார். இவருடைய கடை, தூத்துக்குடியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் இருப்பதால் வெளியூர்க்காரர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பிரியாணியை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள மகேந்திரன், “பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து தமிழக அரசு மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டத்தைத் தொடங்கியிருக்கு. என்னோட கடைக்கு பிரியாணி வாங்க வர்றவங்களை துணிப்பையை எடுத்துக்கிட்டு வரச்சொல்லி அறிவுறுத்தியிருக்கேன்.
பிளாஸ்டிக் பயன்பாட்டுல எனக்கு விருப்பம் இல்ல. ஆடு, மாடுகள் மேய்ச்சல்ல இரை எடுக்கும்போது சாக்லேட் கவர், பால் கவர், ஷாம்பு கவர்னு சின்னச் சின்ன பிளாஸ்டிக் பேப்பர்களை தெரியாமல் இரையுடன் சேர்த்து விழுங்கி செரிமானம் ஆகாம இறந்து போகுது. பிளாஸ்டிக் , எத்தனை வருஷம் ஆனாலும் மண்ணுல மட்காது.
அதனால பிரியாணியை வாழை இலையில போட்டு மடக்கி, நியூஸ் பேப்பர் சுத்திதான் பார்சல் போட்டு ஆரம்பத்துல விற்பனை செஞ்சுகிட்டு வந்தேன். அதே நேரத்துல விளாத்திக்குளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல வீட்டுக்கு வீடு பெண்கள் பனையோலையால பெட்டி முடைவாங்க. பிளாஸ்டிக் பயன்பாட்டால பனையோலைப் பெட்டி பயன்பாடு குறைஞ்சு போச்சு.
கிராமப் பகுதிகள்ல உள்ள ஸ்வீட் கடைகள், திருவிழாக்கால கடைகள்ல காராச்சேவு, கருப்பட்டி மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளை பனையோலைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து கொடுப்பாங்க. சில கிராமங்கள்ல இந்தப் பழக்கம் இப்போதும் நடைமுறையில இருக்கு. இப்படிப் பனையோலைப் பெட்டியில் அடைக்கப்பட்ட இனிப்பு மிட்டாய்கள் கூடுதல் வாசனையுடன் இருப்பதுடன் சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும்.
பிரியாணியையும் பனையோலைப் பெட்டியிலயே பார்சல் போட்டுக் கொடுத்தா என்னன்னு எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இந்தப் பெட்டியை தண்ணியில கழுவி வெயில்ல காய வச்சு ஏதாவது பொருட்களைப் போட்டு வச்சுக்கலாம். இதே பனையோலைப் பெட்டியில செடிகளையும் வளர்க்கலாம். வேண்டாம்னு தூக்கித் தூர எறிஞ்சாலும் அது மண்ணுக்கு உரம்தான். பனையோலைப் பெட்டி முடையுறத் தொழிலுக்கு என்னால முடிஞ்ச ஆதரவு” என்கிறார் மகேந்திரன்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தொன்னை பிரியாணி பிரபலமாகி வருவதுபோல், இந்த பனையோலைப் பெட்டி பிரியாணியும் விரைவில் பிரபலமாகி விடும் என்கிறார்கள் உணவுப்பிரியர்கள்.
**- ராஜ்-**
.