பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்!

public

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரைத் தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் அருகே நந்தி துர்கா மலையில் உற்பத்தியாகும் பாலாறு கர்நாடகத்தில் 90 கிலோமீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்தில் நுழைந்து, 222 கிலோ மீட்டர் தூரம் பயணித்து காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

பாலாற்றின் குறுக்கே கர்நாடகத்தில் 3 தடுப்பணைகள், ஆந்திராவில் 21 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. எனவே இவற்றைத் தாண்டி தமிழகத்திற்கு நீர் வருவது என்பது அரிதாக இருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதாலும், நிவர் புயலின் காரணமாகவும் , பாலாற்றின் துணை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

அதோடு, காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டுள்ள உபரி நீரானது பாலாற்றின் வழியாக வினாடிக்கு சுமார் 40 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் உடனடியாக பள்ளிக் கூடங்கள் திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் சென்று தங்கிக் கொள்ளுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் காவேரிப்பாக்கம் அருகே ஆற்றில் இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மேகமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் என்பவர் மாடுகளை ஆற்று பகுதியில் கரையைக் கடக்க வைக்க முயன்றபோது, அடித்துச் செல்லப்பட்டு ஆற்றின் நடுவே இருந்த பாறையில் ஏறி தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது அவரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதுபோன்று, திருப்பத்தூர் உதயேந்திரம் அருகே பாலாற்றில் குளித்த நித்திஷ் என்ற மாணவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆம்பூர் அருகே பாலாற்றுப் படுகையில் வளர்க்கப்பட்டு வந்த, முனி ரத்தினம் என்பவருக்குச் சொந்தமான 11,000 வாத்துகள் திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன.

இதுபோன்று பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதிக்குச் சென்று வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ வேண்டாம் என்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *