வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி கோவிலில் 45 நாட்கள் ரோப் கார்கள் நிறுத்தி வைக்கப்பட உள்ளன. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி கோவில் மிகப் பிரபலமானது. இந்த கோவிலில் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் சாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய திரண்டு வருவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக பழனி கோவிலில் ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு கிரி வீதியில் அமைந்துள்ள ரோப் கார் நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு செல்லும் போது இயற்கை அழகை ரசித்து கொண்டே செல்ல முடியும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப் கார்களில் செல்வதையே விரும்புகின்றனர். இந்த ரோப் கார்கள் காலை 7 மணி முதல் 8 மணி வரை தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தினமும் மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படும். இந்த ரோப் கார்களில் பயணத்திற்காக பக்தர்களிடம் இருந்து 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த ரோப் கார்கள் பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறையும் வருடம் 45 நாட்களும் நிறுத்தி வைக்கப்படும். அதன்படி நாளை முதல் ஜூலை 30ஆம் தேதி வரை இந்த ரோப் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த பராமரிப்பு பணிகளின் போது ரோப் கார்களில் ஏதேனும் பழுது பட்டிருந்தால் அது உடனடியாக சரி செய்யப்படும். இந்த பராமரிப்பு நாட்கள் முடிந்தவுடன் ஒரு சோதனை ஓட்டம் நடத்திய பின்னர் தான் பக்தர்கள் இந்த ரோப் கார்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
.