உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், சளி, காய்ச்சல் இருப்பவர்கள் பழனி கோயிலுக்கு வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சீனாவின் வுகான் மாநிலத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 4200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாகக் கேரள அரசு சபரிமலை கோயிலுக்குப் பக்தர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதுபோன்று மாநிலத்தில் பல்வேறு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையைப் போன்று தமிழகத்தில் பழனிக்கும், சளி காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு, சளி, இருமல், ஜலதோஷம், மூச்சுத் திணறல் உள்ள பக்தர்கள் வருவதையும், திருவிழாக் காலங்களில் கலந்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மருத்துவ உதவி தேவைப்படும் பக்தர்கள் மலைக் கோயில் ரோப் கார், படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முதலுதவி சிகிச்சை மையங்களை அணுகலாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை , வெளிநாடுகளிலிருந்து வந்த 1,265 பேர் கண்காணிப்பில் இருப்பதாகச் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த காஞ்சிபுரம் பொறியாளர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
**-கவிபிரியா**�,