பழநி அருகே வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டதால் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு வாலிபர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பழநியை அடுத்த ஆயக்குடியில் வருவாய் அலுவலகம் உள்ளது. இங்கு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான சாதி, வருமானம் மற்றும் வாரிசு சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 19) ஆயக்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலக நுழைவு பகுதியில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் நிற்பதாக ஆயக்குடி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் விசாரணையில் அவர், ஆயக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்றும், அவர் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அதற்கு வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதாகவும் கூறினார். இதையடுத்து பெட்ரோல் கேனுடன் மனு கொடுப்பதற்கு வரக் கூடாது என்றும், வாரிசு சான்றிதழ் குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவம் குறித்து பழநி தாசில்தார் பழனிச்சாமியிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
**ராஜ்**�,