பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இரவு 10 மணிக்கு மேல் திருமண விழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் எரிபொருள், உணவு, மற்றும் மின்சார தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாகவே, பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அரசு மாற்றம் நிகழ்ந்தது. இந்த கடுமையான நெருக்கடி சூழலை சமாளிக்க பாகிஸ்தான் அரசு, உலக நாடுகளிடம் இருந்து கடனுதவியை கோரி வருகிறது.
பாகிஸ்தான் நாட்டில் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால், நிலக்கரி வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது பாகிஸ்தானின் கிராமப்புறங்களில் நாள்தோறும் 18 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மற்றும் இயற்கை வாயு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், பாகிஸ்தானில் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மின்சார தட்டுப்பாட்டை கையாள மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத் நகரில் இரவு 10 மணிக்கு மேல் திருமண விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சந்தைகள் இரவு 8.30 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரவு நேர மின்சாரத்தை அதிகமாக மிச்சப்படுத்தலாம் என்று பாகிஸ்தான் அரசு கூறுகிறது. மேலும் இந்த தடைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.
.