26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கை, அடிப்படை வீட்டுத் தேவைகளுக்கு அவர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும், ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத், 2008ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நாவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஹபீஸ் சயீத் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டன.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் வழிகாட்டுதல் படி தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் அரசு ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கை தடை செய்துள்ளது. மேலும், ஹபீஸ் சயீத் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில், ஜூலை 17 அன்று பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். லாகூரின் கோட் லக்பத் சிறையில் உயர் பாதுகாப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளார் ஹபீஸ்.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று(செப்டம்பர் 26) பாகிஸ்தான் வைத்துள்ள கோரிக்கையில், ‘1974 முதல் 1999 வரையிலான காலப்பகுதியில் லாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹபீஸ் சயீத், தனது சேவையை முடித்து, தனது வங்கிக் கணக்கு மூலம் 45,700 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வருகின்றார். அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதால், அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட அவரது வங்கி கணக்கில் உள்ள நிதியை எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என பாகிஸ்தான் கோரி உள்ளது. மேலும், இப்போது அவர் தனது குடும்பத்தினரின் அடிப்படை செலவுகளை ஈடுகட்ட ரூபாய் 1,50,000 தேவைப்படுவதாக கூறியுள்ளார் என பாகிஸ்தான் கோரி உள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. அடிப்படை செலவுகளுக்கான பணத்தை எடுத்துக் கொள்ள மட்டும் பாகிஸ்தான் அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
�,