பாகிஸ்தான் ஶ்ரீ மாரி மாதா கோவில் சிலைகள் சிதைப்பு!

Published On:

| By admin

பாகிஸ்தானில் சமீபகாலமாக ஹிந்து கோவில்களை இலக்காக்கி கும்பல் வன்முறைகள் நடந்து வருகின்றன. கோட்ரியில் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த அக்டோபர் மாதத்தில் அவமதிக்கும் வகையில் தாக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் உள்ள தெய்வச் சிலைகள் நேற்று அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தற்பொழுது 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தான் அதிக இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு வாழும் இந்து மக்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் கராச்சியின் கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டது என்ற தகவலை அறிந்த அந்த பகுதி போலீசார், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவிக்கையில், “மோட்டார் சைக்கிள்களில் 6 முதல் 8 பேர் வரை திடீரென்று கோவிலுக்கு வந்து சிலைகளை சேதப்படுத்தியதாக மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள்? எதற்காக நடத்தினார்கள்? என்று இன்னும் தெரியவில்லை. சேதப்படுத்தப்பட்ட சிலைகளையும், கோவிலையும் பார்வையிட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.” என்று தெரிவித்தார். மேலும், “இது நாட்டில் சிறுபான்மை சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான நாசவேலை சம்பவம்.” என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் கராச்சியில் வாழும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share