வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதையடுத்து, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் இரு தினங்களுக்கு முன்னர் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஈர்ப்பு மற்றும் தாக்கம் காரணமாகக் கேரளா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் பரவலான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்த கனமழையால், வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், 39 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னை, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி மற்றும் குளச்சல் துறைமுகங்களில் தொலைதூர புயலை முன்னறிவிப்புச் செய்வதற்கான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.�,