மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்தபோது வேலூரில் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இன்று (ஜூலை 11) முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மனுத் தாக்கல் செய்தார். அவர் வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தேனி தொகுதியைத் தவிர இதர தொகுதிகளில் தோல்வியுற்ற நிலையில் வேலூரில் உரிய கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே, வேலூர் தேர்தல் ரத்தானதற்கு திமுகதான் காரணம் என்று ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், தனது வெற்றிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடியும் வேலூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுகவும், பாஜகவும் வேலூர் மீது குறிவைத்துள்ளதால் அனைவரின் கவனமும் வேலூர் தொகுதி பக்கம் திரும்பியுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[அஜித் சம்பளம் 100 கோடியா?](https://minnambalam.com/k/2019/07/11/20)**
�,”