சந்தையில் விற்பனை செய்யும் பாலுக்கு போதிய விலை கிடைக்காமல் பால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். குடிநீரை விடப் பாலின் விலை குறைந்துள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கோலாப்பூரில், ஒரு சில பால் விவசாயிகளுக்குச் சந்தையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.23 கிடைக்கிறது. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் ஒரு லிட்டர் பாலுக்குச் சராசரியாக ரூ.17 முதல் ரூ.19 வரையில் மட்டுமே பெறுகின்றனர். குடிநீரின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.20 ஆக இருக்கும் நிலையில் பாலின் விலை அதை விடக் குறைந்துள்ளதால் பால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். உற்பத்திச் செலவைக் கூட ஈட்ட முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். விவசாயிகள் விற்பனை செய்யும் பாலானது நுகர்வோராகிய மக்களை அடையும் போது ரூ.40 முதல் ரூ.44 வரையில் விலைபோகிறது. எனவே தாங்கள் ஏமாற்றப்படுவதாகப் பால் விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த எட்டு மாதங்களாகவே சர்வதேசச் சந்தையில் பால் பவுடரின் விலை லிட்டருக்கு ரூ.10 வரையில் குறைந்துள்ளதால் உள்நாட்டுப் பால் விவசாயிகள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் பால் விவசாயிகள் நிவாரணம் கோரி போராட்டங்களில் இறங்கியுள்ளனர். மகாராஷ்டிராவின் சங்லி பகுதியைச் சேர்ந்த பாபாசாகேப் மனே என்ற பால் விவசாயி ‘எகனாமிக் டைம்ஸ் ‘ ஊடகத்திடம் பேசுகையில், “நான் மாடுகளுக்காகத் தினசரி ரூ.1000 செலவிடுகிறேன். ஆனால் எனக்கு வெறும் ரூ.720 மட்டுமே கிடைக்கிறது. முன்பெல்லாம் எனக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 வரையில் லாபம் கிடைக்கும். ஆனால் இப்போது ரூ.9,000 வரையில் நஷ்டம்தான் ஏற்படுகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார்.
பாலுக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பாலின் கொள்முதல் விலை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இந்த மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களில் மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி 22 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பாலுக்கான கொள்முதல் விலை மட்டும் உயரவே இல்லை.�,