pவிடை பெற்ற முத்துக்கருப்பன் – ஓவியர் ஜீவா

public

மூத்த எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவுச்செய்தி கேட்டு வருந்தும் வேளையிலேயே அடுத்த இடியாய் மற்றுமொரு மூத்தவர் மா.அரங்கநாதனின் இழப்பு, செய்தியாய் வருகிறது. தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு ஒரு இலக்கிய அடையாளமாய் திகழ்ந்த ‘முன்றிலை’ யாரும் மறந்திருக்கமுடியாது. சிறு பத்திரிகையாய், பதிப்பகமாய், இலக்கிய பத்திரிகைகளின் விற்பனையகமாய், நிறைய இளம் எழுத்தாளர்களின் ஆதர்ச முகவரியாய் திகழ்ந்தது மா.அரங்கநாதனின் முன்றில்.

தரமான எழுத்தாளர்களை இலக்கியத்திற்கு அளித்த குமரி மாவட்டம்தான் மா.அரங்கநாதனையும் வழங்கியது. பிறந்ததென்னவோ திருப்பதிசாரத்தில் …ஆனால் வாழ்க்கையின் பெரும் பகுதி சென்னையாய் மாறிப்போனது. விளம்பர வெளிச்சத்துக்கு என்றுமே வராமலேயே பெரும் வாசகர் கூட்டத்தை பெற்றவர் அரங்கநாதன். முத்துக்கருப்பன் எனும் பாத்திரப்படைப்பு பெரும்பாலான அவரது படைப்புக்களில் உலாவரும். இது அவர்தானோ என்ற சந்தேகம் அவர் வாசகர்களுக்கு என்றும் உண்டு. அங்கதமும் விட்டேத்தியுமான ஒரு அலாதி பாத்திரமாக முத்துக்கருப்பன் வந்து போவான்.

‘பறளியாற்று மாந்தரும்’ ‘காளி ஊட்டும்’ அவருடைய அற்புத நாவல்கள்.

காடன் மலை, வீடுபேறு, ஞானக்கூத்து என்ற தலைப்புக்களில் அவருடைய சிறுகதை தொகுதிகள் வந்திருக்கின்றன.

திரைப்படங்களில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக ஹாலிவுட் படங்களை சிறு வயது முதல் கண்டு ரசித்தவர். என்னுடைய ‘திரைச்சீலை’ நூலுக்கு அவர் ஒரு விமர்சனக்கட்டுரை எழுதியது நான் அடைந்த பெரும்பேறு.

கடந்த சில வருடங்களாக அவர் புதுவையில் வசித்து வந்தார். புதுவை வரும் எந்த வாசகரும் எழுத்தாளரும் இவரையும் கி.ராஜநாராயணனையும் சந்திக்காமல் சென்றது கிடையாது. மாந்திரீக யதார்த்த பாணியை தமிழில் அதிகமாக கையாண்டவர் இந்த தமிழ்நாட்டு போர்ஹே என்று வாசகர்கள் கொண்டாடுவர்.

முன்றில் பத்திரிகை மட்டுமல்ல முன்றில் இலக்கிய கூட்டங்களும், சீரியஸ் வாசகர்களின் பட்டறையாக திகழ்ந்தன. ஆதிமூலம் போன்ற பெரும் ஓவியக் கலைஞர்களை சிறு பத்திரிக்கை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களில் மா.அரங்கநாதனும் ஒருவர். முன்றில் என்ற எழுத்தையே வடிவமைத்தவர் ஆதிமூலம்தான் என்று நினைக்கிறேன்.

பலருக்கும் தெரியாத செய்தி, ‘கடவுளும் கிழவனும்’ போன்ற மொழிபெயர்ப்பு நூல்களை எழுதிய மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான எம்.எஸ். என்றழைக்கப்பட்ட எம்.சுப்பிரமணியம் இவரது உடன் பிறந்த சகோதரர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்புக்களிலும் வழக்குகளிலும் தமிழ் இலக்கியத்திலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டும் , உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஆர்.மகாதேவன் இவரது மைந்தர்.

மா.அரங்கநாதனுடன் நிகழ்த்திய உரையாடலை கவிஞர் ரவி சுப்பிரமணியன் ஒரு அருமையான ஆவணப்படமாக பதிவு [செய்திருக்கிறார்.](https://www.youtube.com/watch?v=uiH3ipBTABg)�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *