சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்க வேண்டாம் என விஜய் நன்மைக்குத்தான் கூறினேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து பேசிய அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இதற்கு 5 ஆயிரம் ரூபாய்க்கான உத்திரவாதத்திற்கு கையெழுத்திட பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 11) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நேரில் ஆஜராகினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, ”சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தும் மாவட்டங்களில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது. அப்படி இந்தத் திட்டத்தில் என்ன ரகசியம் உள்ளது” எனக் கேள்வி எழுப்பினார். எட்டு வழிச் சாலைக்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை விரும்பி வழங்குவதாக முதலமைச்சர் பொய் பேசிவருகிறார் என்று குறிப்பிட்ட அன்புமணி, எட்டு வழிச் சாலை திட்டத்தை சென்னை – கன்னியாகுமரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையில் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சர்கார் பட விவகாரத்தில் தான் விஜய்க்கு நல்லது தான் கூறினேன். விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கூறினேன்.விஜய் தமிழன் என்றால் நான் என்ன ஜப்பானில் இருந்து வந்தவனா?.சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இதுதொடர்பான கூட்டத்தை நடிகர் சங்கம் கூட்டினால் அங்கு விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த அன்புமணி, ”புகை பாதிப்பு குறித்து நாங்கள் பேச அனைத்து உரிமைகளும் உள்ளது. நான் மத்திய அமைச்சராக இருந்த போது புகையின் பாதிப்பை தடுக்க நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம், புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கும் அதிகாரம் மத்திய அமைச்சராக இருந்தபோது எனக்கு இல்லை. இருந்திருந்தால் பூடான் நாட்டில் இருப்பதைப் போல புகையிலை பொருட்களுக்கு தடை விதித்திருப்பேன்” என்றும் தெரிவித்தார்.
அரசு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய கூடாது எனவும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டம் பலவீனமாக இருப்பதாகவும், இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அளித்த அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
விஜய் நடிக்கும் சர்க்கார் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், போஸ்டர் வெளியான சற்று நேரத்திலேயே பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்க்கப் படக்குழு சர்ச்சைக்குரிய போஸ்டரைச் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து நீக்கியது. இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த நடிகர் சிம்பு, சர்கார் பட விவகாரம் குறித்து அன்புமணியோடு விவாதிக்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.�,