விஜயபாஸ்கரிடம் விசாரணை நடந்த அதேநாளில் வருமான வரித்துறையினர் மீண்டும் அவரின் உறவினர்கள் தங்கியுள்ள விடுதிகளில் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், குவாரி உள்ளிட்ட 36 இடங்களில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்த ஆவணங்கள் மற்றும் அவரது உதவியாளர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் சிக்கியது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக ஏப்ரல் 10ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி ஆஜரான விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் பல கேள்விகளைக் கேட்டு குடைந்தெடுத்துள்ளனர். இதற்கிடையே விசாரணை முடிந்து மாலை 4 மணியளவில் விஜயபாஸ்கர் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வருமான வரித்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
விசாரணைக்காக விஜயபாஸ்கர் மீண்டும் அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து வருமான வரித்துறையிடம் மூன்று நாள்கள் விலக்கு அளிக்கக் கோரியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் கார், வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வீடு போய் சேருவதற்குள், சென்னை பூக்கடையில் அவரின் உறவினர்கள் தங்கியிருந்த தனியார் விடுதி அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த ஆரம்பித்தனர். முருகப்பா செட்டி தெருவில் ஐந்து பேர் தங்கியிருக்கும் இரண்டு அறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். விஜயபாஸ்கரைக் குறிவைத்து நடந்துவரும் அடுத்தடுத்த சோதனைகளால் அவர் மிகவும் கலக்கமடைந்துள்ளார்.�,