ரிட்டன் தாக்கலுக்கான கடைசித் தேதி முடிவடைந்த நிலையில் 60 சதவிகிதம் கூடுதலான அளவில் ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
வருமான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 5.29 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி ரிட்டன்களை வரி செலுத்துவோர் தாக்கல் செய்துள்ளதாக வரித் துறை அதிகாரிகள் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையை விட 60 விழுக்காடு கூடுதலாகும். நடப்பு நிதியாண்டில் சரியாக 5,29,66,509 வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று மட்டும் இரவு 7 மணி வரையில் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவு வரை ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டதாலும், கேரள மக்களிடமிருந்து வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்படவிருப்பதாலும், ரிட்டன்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும். கடந்த ஆண்டில் சுமார் 3.2 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.�,