தமிழகத்தில் 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கும் சிறப்பு நிதி திட்டத்திற்கு தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்த மனுவில், ”தமிழகம் முழுவதும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் நிதி உதவியாக வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது என்பது எதிர்வரும் மக்களவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் விதமாக உள்ளது” என குற்றம்சாட்டியிருந்தார்.
”அரசு புள்ளி விவரங்களின்படி 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இல்லை. தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 11 சதவிகித பேர் தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இவ்வளவு குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு புள்ளி விபரங்களிலும் இல்லை. தமிழக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் வெறும் 11 லட்ச குடும்பங்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
”அரசு தற்போதைய எண்ணிக்கையை அதிகரித்து தவறாக அனைவருக்கும் உதவித் தொகை வழங்குகிறது. 2018 -19 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் அந்த்யோதயா ரேஷன் அட்டை
வைத்துள்ள 18 லட்சம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க முடியும். எனவே சிறப்பு நிதி உதவி வழங்குவது என்பது பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகும். உண்மையாக வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். தற்போது அரசு அறிவித்துள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் செந்தில் ஆறுமுகம் ஆஜராகி, அரசின் புள்ளி விபரங்கள் தவறு எனவும் கடந்த 1993-94 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொகையில் 51 சதவிகிதமாக இருந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த 2011 – 12 ஆம் நிதியாண்டில் 11 சதவிகிதமாக குறைந்ததாக அரசு தெரிவித்தது. ஆனால் தற்போது 60 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளதாக அரசு கூறுவது தவறு. தேர்தலைக் கருத்தில் கொண்டு இதனை அரசு செயல்படுத்துவதாக தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்தத் திட்டம் செயல்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. அனைத்தும் வெளிப்படையாக நடைபெறும். பயனாளிகளின் ஆதார் அட்டை இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைச் சேகரிக்க 55 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
]தமிழகத்தில் ஏழைகள் கணக்கெடுப்பு 2006 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேடும் பராமரிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருவாய் கொண்டவர்களை ஏழைகள் என முடிவு செய்யப்பட்டது. பல கட்டங்களில் நடத்திய இந்த கணக்கெடுப்பில் கிராமப்புற பகுதிகளில் 32.13 லட்சம் குடும்பங்களும், நகர்ப்புற பகுதிகளில் 23.54 லட்சம் குடும்பங்களும் என 55.68 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிதியைப் பெறுவதில் போலிகள் பயனடைவதை தடுக்க மின்னணு முறையில் பணம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது எனத் தெரிவித்தார். ஏழைக் குடும்பங்களுக்கு நிதி வழங்குவது அரசின் கொள்கை முடிவு அதனையே அரசு செயல்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அப்போது மனுதாரர் , தமிழகத்தில் வறுமை குறைந்து வருவது போல காட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் 30 சதவிகித ஏழைகள் இருக்கிறார்கள் என்பதை அரசு ஒப்புக் கொள்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது எனக் குற்றம்சாட்டினார். அரசின் கொள்கை முடிவுகளில் சட்டம் அல்லது விதி மீறப்பட்டால் அல்லது உள் நோக்கம் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம் எனவும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் மனுதாரர் கூறுகின்ற 2011-12 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் தற்போது மாறியிருக்கும். 2018 -19 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களைக் குறிப்பிட்டு வழக்கு தொடரவில்லை எனத் தெரிவித்தனர். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது எனவே மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும். அரசின் 2000 ரூபாய் நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை இல்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.�,”