P
ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு வழங்குவதற்கான சட்டப் பிரிவை மத்திய அரசு செயலாக்கம் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சி தொடர்பான விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு 7ஐ மத்திய அரசு செயலாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சட்டப் பிரிவின் கீழ், ரிசர்வ் வங்கியின் ஆளுநருடன் ஆலோசனை நடத்திய பிறகு பொது நலன் கருதி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும். சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரையில் இச்சட்டப் பிரிவு செயலாக்கம் செய்யப்படவில்லை. இதே நேரத்தில், ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேலும் தனது பதவியை ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நிதியமைச்சகம், அரசு உயரதிகாரிகள் என எந்தத் தரப்பும் பதிலளிக்கவில்லை. பொருளாதாரம் குறித்து மேலும் கெட்ட செய்திகள் உள்ளன என்பதையே அரசின் நடவடிக்கை காட்டுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “1991, 1997, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நாங்கள் பிரிவு 7ஐ செயலாக்கம் செய்யவில்லை. இப்போது செயலாக்கம் செய்வதற்கான அவசியம் என்ன? பொருளாதாரம் குறித்த உண்மைகளை அரசு மறைத்து வைத்துள்ளது என்பதையும், அரசு நம்பிக்கையிழந்த நிலையில் இருப்பதையுமே இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.�,