மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது.
திமுக கூட்டணியில் எண்ணிக்கை அடிப்படையிலான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், திமுக 20 தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதன்படி கே.எஸ்.அழகிரி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று (மார்ச் 9) காலை, மாலை என இரண்டு கட்டங்களாக திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதனை ஏற்று மார்க்சிஸ்ட் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ சவுந்தரராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை திருப்பூர், தென்காசி (தனி) தொகுதிகளையும் மாநகரப் பகுதிகளில் வடசென்னை தொகுதியையும் விருப்பத் தொகுதிகளாக பட்டியலிட்டு திமுகவிடம் அளித்துள்ளதாம். இந்த மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அழுத்தமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அநேகமாக திருப்பூர், தென்காசி தொகுதிகள் மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி தொகுதியில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொ.லிங்கம் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். ஆனால் இந்தமுறை தங்களுக்கு தென்காசி தொகுதி தங்களுக்கு வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துவிட்டதால் மார்க்சிஸ்ட் தரப்பில் தென்காசி தொகுதியை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.�,