நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியதையடுத்து, மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கான இரண்டாம்கட்டக் கலந்தாய்வை நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
கடந்த மே 6ஆம் தேதியன்று நடந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், ஜூலை 1ஆம் தேதியன்று மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வைத் தொடங்கிவைத்துப் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,501 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 723 இடங்களும் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். முதல்கட்டக் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதியன்று முடிவடைந்தது.
நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களுக்கான கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த 10ஆம் தேதியன்று வெளியானது. இதில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமென்றும், புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கியது நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அடங்கிய அமர்வு. இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தே தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தகவல் வெளியானது.
ஜூலை 16, 17, 18 தேதிகளில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு நடக்குமென்று மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 12) மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வை நிறுத்திவைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் பின் இந்தக் கலந்தாய்வு தொடருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.�,