மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தனது மனைவியைப் பறிகொடுத்த சமூக ஆர்வலர் ஒருவர், கோவை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையொன்றை மூடுமாறு சாலை மறியலில் ஈடுபட்டார். மனைவியின் சடலத்தை வைத்துக்கொண்டு அவர் போராட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டு பொதுமக்கள் பலரும் அதில் கலந்துகொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் கணுவாய் பகுதியை அடுத்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ். இவரது மனைவி பெயர் ஷோபனா (48). நேற்று (ஜூன் 24) ஆனைகட்டியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் படிக்கும் தங்களது மகள் சாந்தி தேவியை அழைத்துக்கொண்டு, ரமேஷ் – ஷோபனா தம்பதியர் இருசக்கர வாகனத்தில் கணுவாய் திரும்பி வந்தனர். வரும் வழியில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனைகட்டியைச் சேர்ந்த சௌந்தர ராஜ் மகன் பாலாஜி, வடக்கால் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் அசோக் ஆகியோர் வந்த அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காலில் எலும்பு முறிவுடன் பலத்த காயமடைந்தார் சாந்தி தேவி. அவர், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கணுவாய் பகுதியிலிருந்து ஜம்புகண்டி என்ற இடத்திலுள்ள டாஸ்மாக் கடைக்குப் பலர் தினமும் சென்று வருகின்றனர். மது போதையில் அளவு கடந்த வேகத்தில் நிதானமில்லாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்களால் அச்சாலையில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
உயிரிழந்த ஷோபனாவின் கணவரான மருத்துவர் ரமேஷ் சமூக ஆர்வலராகவும் சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். விபத்து நடந்தவுடன் மகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மனைவியின் சடலத்துடன் ரமேஷ் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினார். மதுக்கடையை இங்கிருந்து அப்புறப்படுத்தாமல் என் மனைவியின் உடலை எடுக்கவிட மாட்டேன் என்று தெரிவித்தார்.
இதைக்கண்ட ஜம்புகண்டி, கூட்டுப்புளிக்காடு, தெக்கலூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் அவருடன் சேர்ந்து ஆனைகட்டியிலிருந்து கேரளம் செல்லும் சாலையில் மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த பெரியநாயக்கன் பாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மணி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைச் சமாதானப்படுத்தினார். ஆனாலும், பொதுமக்களின் சாலை மறியல் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்தது.
பின்னர் காவல் துறை பாதுகாப்புடன் அங்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள், விரைவில் அங்குள்ள கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதுவரை கடை திறக்கப்படாது என்று தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவர் ரமேஷுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.
**
மேலும் படிக்க
**
**[திமுக வேட்பாளர் தேர்வில் முறைகேடு: ஓஎம்ஜியில் களையெடுத்த ஸ்டாலின்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/25/57)**
**[மோடிக்கு எதிரான கருத்தை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து: தேர்தல் ஆணையம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/25/34)**
**[’நான் விஸ்வரூபம் எடுத்தால்…’ – தினகரனைத் தாளிக்கும் தங்கம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/25/31)**
**[டிஜிட்டல் திண்ணை: தங்கத்தை தூக்கிய தங்கமணி- பழனியப்பனை தூக்கும் வேலுமணி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/24/71)**
**[நீட் கோச்சிங் சென்டர்களின் வருமானம் இவ்வளவா?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/25/23)**
�,”