pபொருளாதார மந்தநிலை: வாகன விற்பனை 31.57% சரிவு!
கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாத கார் விற்பனை மிகக் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தி சங்கங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
வியாபார மந்தநிலை காரணமாக முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் அந்த நிறுவங்கள் தங்கள் வேலை நாட்களைக் குறைத்துக்கொள்கின்றன. நாடு முழுக்க லட்சக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், ஆட்டோமொபைல் விற்பனை சென்ற ஆகஸ்ட் மாதத்தில் மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. பயணிகள் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து பிரிவுகளிலும் வீழ்ச்சியை நோக்கி இந்தத் துறை தொடர்ந்து சரிந்து வருவதாக இந்திய வாகன உற்பத்தி சங்கம் (SIAM) நேற்று(செப்டம்பர் 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1997-98 ஆம் ஆண்டு முதல் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) நாட்டின் மொத்த வாகன விற்பனை தரவுகளை பதிவு செய்யத் தொடங்கியது. தற்போது வெளிவந்த தகவல்களின் படி, SIAM பதிவு செய்யத் துவங்கியதிலிருந்து நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இந்த ஆகஸ்ட் மாதம் தான் மிகக் குறைவான விற்பனை நடந்துள்ளது என தெரிவிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம், 2.87 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1.96லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்த வாகன விற்பனையை விட இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 31.57 சதவிகிதம் குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் 36 சதவீதம் சென்றாண்டை விட குறைந்துள்ளது. இந்த ஆகஸ்ட் மாத விற்பனை : 93,173 வாகனங்கள், சென்ற வருட ஆகஸ்ட் மாத விற்பனை : 1,45,895 வாகனங்கள்.
ஹோண்டா கார்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையை ஒப்பிடும் போது, இந்தாண்டு சரிபாதிக்கும் குறைவான எண்ணிக்கையே விற்றுள்ளன. இதேபோல், சென்னையைச் சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் இந்த ஆகஸ்ட் மாத விற்பனையில், சென்றாண்டுடன் ஒப்பிடும் போது 20.37 சதவீதம் குறைந்துள்ளது.
மேலும், தொடர்ந்து கடந்த பத்து மாதங்களாக வாகன விற்பனை உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் குறிப்பாக கார் விற்பனையை மட்டும் 2018 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, 41 சதவிகிதம் குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. தொழில் வர்த்தகம் சார்ந்த கனரக வாகனங்களின் விற்பனை 38.71 சதவிகிதமாகவும், இருசக்கர வாகன விற்பனை 22 சதவிகிதமாகவும் குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
�,”