புல்வாமா குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்குவதாக ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பிப்ரவரி 14ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிர் துறந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையிலும், 2 படுக்கையறை வசதியுடைய வீடுகள் வழங்கப்படும் என்று இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (கிரெடாய்) அறிவித்துள்ளது. இத்தகவலை கிரெடாய் அமைப்பின் தலைவரான ஜக்சாய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் மேம்பட்டாளர்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக கிரெடாய் செயல்பட்டு வருகிறது. நாட்டின் 23 மாநிலங்களில் 203 நகரங்களைச் சேர்ந்த சுமார் 12,500 மேம்பாட்டாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த அனைத்து 12,500 உறுப்பினர்களும் குண்டு வெடிப்புத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், வீரர்களின் குடும்பத்தினருக்காக வேண்டிக் கொள்வதாகவும் கிரெடாய் தலைவர் ஜக்சாய் ஷா, *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.�,