பரேலி சர்வதேசப் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்துகொள்ள முடியாமல் போனதை எண்ணி வருத்தம் அடைந்திருப்பதாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமா மட்டுமல்லாது ஆங்கில மொழிப் படங்களிலும் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா, யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் தொண்டாற்றி வருகிறார். அவரது சேவையைப் பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேசப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க இருந்தது. ஆனால், நேற்று காலை நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.
நேற்று முன்தினம் டெல்லியில் யுனிசெஃப் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா, நேற்று தனது பூர்வீக மண்ணான பரேலி நகருக்குச் செல்ல விமான நிலையத்துக்கு வந்தார். ஆனால், நேற்று (டிசம்பர் 24) காலை அங்கு நிலவும் கடுமையான பனிப்பொழிவால் விமானங்கள் புறப்பட்டு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தனது பயணத் திட்டத்தை தள்ளிப்போட்டார்.
இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நடைபெற்ற பரேலி சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இன்று காலை நிலவிய கடுமையான பனிப்பொழிவால் விமானம் கிளம்பவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. பரேலி வருவதற்காக மிகவும் ஆவலுடன் இருந்தேன். டாக்டர் பட்டம் பெறுவதற்கு மட்டுமல்லாமல், பழைய நண்பர்களையும், உறவுகளையும், நகரத்தையும் பார்க்க வேண்டுமென விரும்பினேன். ஆனால், அது சாத்தியமாகவில்லை. எனது சேவையைப் பாராட்டி பட்டமளிக்க முன்வந்த பல்கலைக்கழகத்துக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். பட்டம் பெறும் இதர மாணவர்கள் புதிய பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன். உங்களை எல்லாம் விரைவில் நேரில் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.�,