நிக்கி கல்ராணி பெங்களூரைச் சொந்த ஊராக கொண்டவர். ‘1983’ என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர். அதற்கு முன்னர் மாடலாக விளம்பரப் படங்களில் நடித்து இருக்கிறார். ஃபேஷன் டிசைனிங்கை முறைப்படி கல்லூரியில் படித்தவர். ‘யாகவராயினும் நாகாக்க’ படம் மூலம் ஆதிக்கு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் நிக்கி கல்ராணி. பின்னர் ஜி.வி.பிரகாஷ் உடன் ‘டார்லிங்’ படத்தில் நடித்தார். படமும் வெற்றி பெற்றதால், தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நிக்கி கல்ராணி. லாரன்சுடன் சமீபத்தில் நடித்து வெளிவந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் கொஞ்சம் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்திருந்தார்.
தற்போது ‘நெருப்புடா’ படத்திலும், ‘பக்கா’ படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி. முதன்முறையாக இருவரும் இணைந்து நடிப்பதால் இந்தப் படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. சில படங்களின் தோல்விகளால் இருவருமே இந்த படங்களை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களாம். இந்த இரு படங்களும் வெற்றி பெற்றால் நிக்கி கல்ராணியின் தமிழ் மார்க்கெட் இன்னும் எகிறும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். ‘தமிழா? தெலுங்கா?’ என்று படங்களை இனி நிக்கி தேர்வு செய்வதும் இந்த படங்களின் வெற்றியில்தான் இருக்கிறதாம். ஆனாலும் புதிய இயக்குநர்களின் கதாநாயகிகள் பட்டியலில் முதன்மையான இடத்தில் நிக்கி கல்ராணி இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
நிக்கி கல்ராணி நேற்று (7/5/2017) விழுப்புரத்துக்குப் புடவை கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றார். அவரை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் கூடிவிட்டது. சாலையில் போக்குவரத்தும் பெரிய அளவு பாதிக்கப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக கூடிய கூட்டம் கலையவே இல்லை. கடையை விட்டு நிக்கி வெளியே வர முடியாத சூழல் நிலவவே வேறு வழியில்லாமல் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதன் பிறகு காரில் நிக்கி கல்ராணியை ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்திருக்கிறார்கள். நிக்கி கல்ராணிக்கு ரசிகர்கள் அதிகரித்து இருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது.�,