பணமதிப்பழிப்பு, அதைத் தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி என, மத்திய அரசின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் சென்னையில் மொத்த விற்பனைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து மீண்டுவரப் போராடி வருவதாகவும் அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் பணமதிப்பழிப்பும், 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியும் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் பிளைவுட், ஹார்டுவேர், கட்டுமானப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரில் மேற்கூறிய சிறு தொழில் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவிக்கிறது. இதுபற்றி இச்சங்கத்தின் தேசியத் தலைவரான கே.இ.ரகுநாதன் கூறுகையில், “வரும் நிதியாண்டில் மொத்த விற்பனை நிறுவனங்களை மேம்படுத்தும் வகையிலான கொள்கைத் திருத்தம் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஜிஎஸ்டியின் தாக்கம் சீராகி அதன் பயன்களை அரசு அனுபவித்து வருகிறது. ஆனால் அதன் பயன்கள் வாடிக்கையாளர்களுக்கு முறையாகச் சென்று சேரவில்லை. தொழில் நிறுவனங்கள் தற்போது நெருக்கடியான சூழலில் இருக்கின்றன. மேலும், இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரித் தாக்கல் நடைமுறைகள் கடினமாகியுள்ளன. நிதி நெருக்கடியும் அதிகரித்துள்ளது” என்றார். சென்னையில் ரியல் எஸ்டேட் துறையும் பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.�,