இந்திய ஐடி துறை ஊழியர்கள் தங்களது பணியைக் காத்துக்கொள்ள திறனை அதிகரிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஐடி துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில் ஐடி நிறுவனங்களின் புதிய பணியமர்த்துதலும் குறைந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பணியில் இருப்பவர்களும் தங்களது பணியைக் காத்துக்கொள்ள தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அதிகத் திறன் மிக்க ஊழியர்களுக்கு மட்டுமே தேவை இருக்கிறது. இதனால் இத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ளப் பயிற்சி வகுப்புகளை நாடிச் செல்வது அதிகரித்துள்ளது.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி ஆன்லைன் கற்றல் நிறுவனமான எஜுரேகாவில் கடந்த ஆறு மாதங்களில் பயிற்சி வகுப்புகளுக்கு இணைந்த ஐடி பணியாளர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரையில் 200 விழுக்காடு அளவுக்குக் கூடுதலாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு இணைந்துள்ளனர். அதிகபட்சமாக இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் துறைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு துறையில் 100 விழுக்காட்டினரும், ரோபோடிக்ஸ் பிராசஸ் துறையில் 78 விழுக்காட்டினரும், பிளாக்செயின் துறையில் 60 விழுக்காட்டினரும், டேட்டா சயின்ஸ் துறையில் 60 விழுக்காட்டினரும், பிக் டேட்டா பிரேம்வொர்க்ஸ் துறையில் 40 விழுக்காட்டினரும் கூடுதலாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் இணைந்துள்ளனர்.
இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உலகச் சந்தையில் இந்தியா 1.52 பில்லியன் டாலர்களுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவுக்கு அடுத்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் 0.94 பில்லியன் டாலர்களுடனும், அமெரிக்கா 0.81 பில்லியன் டாலர்களுடனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் 0.15 பில்லியன் டாலர்களுடனும், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகின் எஞ்சிய நாடுகள் 0.046 பில்லியன் டாலர்கள் மதிப்பைக் கொண்டுள்ளன.�,