’கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேங்காய் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் தேங்காய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த தேங்காய் உற்பத்தியில் 31 சதவிகிதம் தமிழ்நாட்டின் பங்கு இருக்கிறது. கோயம்புத்தூர், தஞ்சாவூர் உட்பட மொத்தம் 4.65 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தமிழகத்தில் தேங்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஆண்டுக்கு 700 கோடி தேங்காய் உற்பத்தியாகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 68,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டு தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.
தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தேங்காய் வரத்து குறைந்துள்ளதால் தமிழகமெங்கும் தேங்காயின் விலை அதிகரித்து வருகிறது. தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 வரை விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் முன்பு ரூ.18க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தேங்காய் இன்று ரூ.25 வரை விற்கப்படுகிறது. ரூ.25க்கு விற்கப்பட்டு வந்த தேங்காய் ரூ.35 வரைக்கும் விற்கப்படுகிறது.
தேங்காய் மட்டுமின்றி அதைச் சார்ந்த தேங்காய் எண்ணெய், கொப்பரை உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.�,