Pதனித்துவிடப்படும் காங்கிரஸ்!

Published On:

| By Balaji

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்ற அறிவித்திருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் , மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று (அக்டோபர் 6) அறிவித்தது. டிசம்பர் 11ஆம் தேதி 5 மாநில வாக்கு எண்ணிக்கை மொத்தமாக எண்ணப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார். இதேபோல், இனி காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருக்க போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று கூறியிருந்தார்.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 5 மாநில தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என நேற்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது. சிபிஐ(எம்) மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாக்கு சிதறுவதை தவிர்க்க காங்கிரஸுடன் கூட்டு வைக்கலாம் என்ற வாதத்தையும் மத்திய குழு நிராகரித்துள்ளது. அதேநேரத்தில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

ராஜஸ்தானில் சிபிஐ(எம்), சிபிஐ, சமாஜ்வாதி கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சிபிஐ(மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா(எம்சிபிஐ) ஆகியவை கூட்டுச் சேர்ந்து தேர்தலை சந்திக்கவுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த கூட்டணிக்கு வரவேண்டும் என சிபிஐ(எம்) தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் சிறிய கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க சிபிஐ(எம்) முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. தெலங்கானாவில் இடதுசாரிகள் மற்றும் அம்பேத்கர்வாதிகள் இணைந்த பகுஜன் இடது முன்னணியில் சிபிஐ(எம்) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் போன்ற முக்கியக் கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாதது அக்கட்சிக்கு பாதகமாகவும், பாஜகவுக்கு சாதகமாகவுமே பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel